×

சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையின்போது சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இயக்குநர்/பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.  

முன்னதாக, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், சென்னை மாநகர மின் கட்டுபாட்டு மையம் மற்றும் 24 மணி நேர மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை பார்வையிட்டு மின் கட்டமைப்பு மற்றும் தமிழகத்தின் மொத்த மின் தேவை குறித்து கேட்டறிந்தார். பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-

பெய்து வருகின்ற மழையின் காரணமாக பொதுமக்களுக்கும்,  தொழிற்சாலைகளுக்கும் வழங்கக்கூடிய மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மின்சார வாரியத்திற்கு உத்தரவினை வழங்கியிருக்கிறார்கள்.  

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.  காவிரி ஆற்றில் அதிகமான நீர் செல்லக்கூடிய இந்த சூழலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், எந்தவிதமான அசம்பாவிதங்களும் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தான் சில மின் மாற்றிகளில் மட்டும் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

மழை நீரால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாக 3,76,226 மின் மாற்றிகள் இயக்கத்தில் உள்ளன.  அதில் ஈரோட்டில் 02 மின் மாற்றிகளும், மேட்டூரில் 12 மின் மாற்றிகளும், தஞ்சாவூரில் 04, கரூரில் 04, நாமக்கல்லில் 16, நீலகிரியைப் பொறுத்தவரைக்கும் 150 மின் மாற்றிகள் என மொத்தம் 188 மின் மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் மிக அதிமானது நீலகிரி மாவட்டம்.  அதற்கு காரணம் 12 இடங்களில் மரம் விழுந்துள்ளது. மரங்களை அகற்றக் கூடிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய மின் இணைப்புகளில் 5,392 மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த மின் மாற்றிகள் மூலம் மின் விநியோகம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இன்று மாலைக்குள் நீலகிரி மாவட்டத்தில் லைனில் விழுந்த மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு சீரான மின் விநியோம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இனி வரக்கூடிய நாட்களில் 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு சிறப்பு அதிகாரி என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றக் கூடிய வகையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் பொதுமக்களும், தொழிற்சாலைகளும் மின் விபத்துக்கள் ஏற்படா வண்ணம், மின் கசிவுகள் ஏற்படாத வண்ணம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.  

வட சென்னை மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு என்று செய்திகள் வெளியிடப்படுகிறுது.  ஆனால், அவ்வாறு இல்லை காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆகியவற்றின் வாயிலாக கூடுதல் மின் உற்பத்தி கிடைப்பதினால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  எனவே, மின் உற்பத்தி பாதிப்பு என்பது இல்லை.  தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையம் வாயிலாக போதுமான அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  

ஏற்கனவே, ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை சமாளிக்க சுமார் 1,33,000 மின் கம்பங்கள் மற்றும் 10,000 கிமீ மின்கம்பிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடங்களில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது, அதில், முக்கியமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.  இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது.  

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பராமரிப்பு பணிகள் செய்ய நேரிடும் போது மின் விநியோகத்தில் பாதிப்பு என செய்தி வெளியிடப்படுகிறது. பராமரிப்பு பணிகள் செய்யும் போது பத்திரிக்கையில் வாயிலாக செய்தி வெளியிட்ட பின்பு தான் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  

கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும், சென்னையில் 1,680க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் சுமார் 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.  மீதம் உள்ள பணிகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

சென்னையில் 2,200 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மழைப் பாதிப்புக்கு பின் RMU-க்கள் பெருத்தப்பட்டுள்ளன.  316 துணை மின் நிலையங்கள் மின் உற்பத்தி மற்றும் தேவையை எதிர்கொள்ளவும் அதிகரிக்கும் மின் இணைப்புகளுக்கு சீரான மின் விநியோகம் அளிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.    
   
அந்த பணிகளுடன், கடலோர மாவட்டங்கள் குறிப்பாக சென்னையில் மின் விநியோகக் கம்பிகளை புதைவடமாக மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  சென்னையில், இன்னும் 07 கோட்டங்களில் மின் விநியோக கம்பிகளை புதைவடங்களாக மாற்ற வேண்டியுள்ளது.

அதற்கான திட்ட மதிப்பீடுகள் 1,240 கோடி அளவிற்கு வாரிய ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 100 இடங்களில் மின் வாகன மின்னேற்றும் நிலையங்கள் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மதிப்பீடுகள் செய்யப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.  

முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையோடு மின்சார வாரியத்திற்கு பல திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார்கள்.  2018-2019ல் முடிவு பெற வேண்டிய வடசென்னை அனல் மின் நிலையத்திற்கான பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிப்பதற்கு பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

Tags : Minister ,Senthilfalaji ,Tamil ,Nadu Electricity Board ,Office , Study meeting headed by Minister Senthilbalaji at the Tamil Nadu Electricity Board head office regarding the provision of balanced power supply!!
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...