×

புதுச்சேரியில் 113 போலீசாருக்கு கொரோனா தொற்று: காவலர் பயிற்சி பள்ளி மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் பயிற்சி காவலர்கள் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று முதல் ஒரு வாரத்துக்கு காவலர் பயிற்சி பள்ளி மூடப்பட்டுள்ளது. புதுவையில் கொரோ னா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர். இதில் ஒரு பயிற்சி காவலருக்கு கடந்த ஜூன் 16ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு, தினமும் ஒற்றை இலக்கத்தில் பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் மருத்துவக்குழு நடத்திய கொரோனா பரிசோதனையில் கடந்த 3ம் தேதி 29 பேர், 4ம் தேதி 84 பேர் என 2 நாட்களில் மொத்தம் 113 பயிற்சி காவலர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்திவிட்டு அனைவரையும் ஒரு வாரம் வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்துமாறும், இதற்காக காவலர் பயிற்சி பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடுமாறும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில், காவலர் பயிற்சி பள்ளி நேற்று மூடப்பட்டது. காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16ம் தேதி முதல் ஆக.3ம் தேதி வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Corona pandemic ,Puducherry , 113 policemen infected with Corona in Puducherry: Police training school closed
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது