சென்னையிலிருந்து காரில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: 2 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே போலீசார் நடத்திய சோதனையில் சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட ரூ.1.02 கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை வழியாக காரில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக, இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாக்கோசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹவாலா கும்பலை பிடிக்க கட்டப்பனை டிஎஸ்பி நிஷாத் மோன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர்

நேற்று கட்டப்பனை-புளியன்மலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் அந்த காரின் முன் சீட்டின் அடியில் ஒரு ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த அறையைத் திறந்து பரிசோதித்த போது அதில் கட்டுக் கட்டாக ₹2000, ₹500 நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.1.02 கோடி பணம் இருந்தது. இதையடுத்து அந்தக் காரில் இருந்த மலப்புரத்தைச் சேர்ந்த பிரதீஷ் (40) மற்றும் மூவற்றுப்புழாவை சேர்ந்த ஷபீர் (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து பணத்தை கடத்திக் கொண்டு வருவதாகவும், மூவாற்றுப்புழாவை சேர்ந்த ஒருவருக்கு அதை கொடுப்பதற்காக சென்று கொண்டிருப்பதாகவும் இருவரும் போலீசிடம் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின் இருவரையும் போலீசார் கட்டப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஹவாலா பணத்தை கொடுத்து அனுப்பிய சென்னையை சேர்ந்த நபர் மற்றும் பணத்தை வாங்க திட்டமிட்டிருந்த மூவாற்றுப்புழாவை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: