கடிதம் எழுதி வைத்துவிட்டு எம்எல்ஏ மகன் திடீர் மாயம்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி திருபுவனை தொகுதி எம்எல்ஏ அங்காளனின் மகன் கடிதம் எழுதிவைத்துவிட்டு திடீரென மாயமாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் அங்காளன் (52). முன்னாள் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சரான இவர் கடந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருபுவனை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சட்டமன்றத்தில் பாஜவிற்கு ஆதரவாக உள்ளார்.

இவரது மகன் திலகரசர் (28). இவர் தனியார் பஸ்சில் செக்கராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 11 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மாலை வரை வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. வீட்டில் சென்று தேடிப் பார்த்தபோது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், நான் என் அம்மாவிடம் செல்கிறேன். என்னை தேட வேண்டாம். குட் பய், குட் லக் என்று எழுதி மேஜையில் வைத்திருந்நது தெரியவந்தது. இது குறித்து அங்காளன் எம்எல்ஏ திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான திலகரசர் எம்.எல்.ஏ அங்காளனின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மனைவி கொடைக்கானலில் உள்ளார். எனவே அவர் அங்கு சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் கொடைக்கானல் விரைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். மாயமான திலகரசர் வெளியே செல்லும்போது செல்போன் எடுத்துச்செல்ல வில்லையாம். ஏற்கனவே அவரது செல்போன் பழுது ஏற்பட்டு சரி செய்வதற்காக கடையில் கொடுத்திருப்பதால் செல்போன் டவர் மூலம் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ மகன் மாயமான சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: