குன்றத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் 1500 பேருக்கு இலவச சைக்கிள்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி  நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு  1500 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.  பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த கல்வியாண்டில் 9,551 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும்  11ம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரம் செலவில் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கடந்த ஜூலை 25ம்தேதி தொடங்கி வைத்தார். இப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி சத்யா சதுரங்க விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். குன்றத்தூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் குன்றத்தூர் உள்ளாட்சி அமைப்பினரின் ஒத்துழைப்புடன் பள்ளியில் நல்லமுறையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1541 தொடக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 1,44,000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்காக ₹33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்து 99 ஆயிரம் குழந்தைகளின் எண்ணும் எழுத்தும் என்ற இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

₹199.96 கோடி மதிப்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் உருவாக்கப்பட்டு சிறப்புடன்  செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். 865 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ₹20.26 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொழிற்கல்லூரியில் படிக்க 7.5% இடஒதுக்கீடு  அளிக்கப்பட்டு, அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையும், அரசுப்பள்ளிகளில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவர்கள் பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்து அனைத்து துறையிலும் சிறந்த வல்லுநர்களாக திகழவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, குன்றத்தூர் நகர்மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் பிரேமலதா, பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: