கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி; 7 மாதத்தில் 52,770 பேர் கைது: மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் அதிரடி

பாட்னா: கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வருவதால் மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கடந்த 7 மாதத்தில் 52,770 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருந்தாலும், விஷ சாராயம் குடித்து இறப்போரின் எண்ணிக்கையும், கள்ள மார்க்கெட்டில் மதுபானம் விற்பனையும் அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாநில காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் பணிக்குழு சார்பில்,  கடந்த 7 மாதங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 73,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மாநிலத்தில் கடந்த 7 மாதத்தில் மொத்தம் 73,413 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 40,074 பேர் மதுவிலக்கு அமல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களின் மூலம் 52,770 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் 2018ல் 4,012 குற்றவாளிகள், 2019ல் 4,313, 2020ல் 3,802, 2021ல் 5,522 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு இந்தாண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஜனவரியில் 4,357, பிப்ரவரியில் 4,118, மார்ச்சில் 5,422, ஏப்ரலில் 4,490, மே மாதம் 6,255, ஜூன் மாதம் 6,992, ஜூலையில் 8,440 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பீகாரில் 38 மாவட்டங்களிலும் 233 குழுக்கள், மாவட்ட காவல்துறையுடன் இணைந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றன’ என்றனர்.

Related Stories: