தஞ்சை மாணவி மரண வழக்கு; ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல்

புதுடெல்லி: தஞ்சாவூர் அடுத்த மைக்கேல்பட்டி பள்ளியில் படித்த அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி மரண வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாணவியின் தந்தை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு, விளக்க மனு தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பெலம் திரிவேதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நிலை என்ன? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர், விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார். இதையடுத்து தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘மாணவி மரண விவகாரத்தை பொருத்தமட்டில் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்து விட்டோம். இருப்பினும் முன்னதாக இந்த வழக்கு இங்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை மீது சில கருத்துக்களை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தை ‘பிரஸ்டீஜாக’ எடுத்துக்கொள்ளக் கூடாது என கூறப்பட்டது. அந்த கருத்தை நீதிமன்றம் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட குழந்தைகள் உரிமைகள் நல பாதுகாப்பு ஆணையம் தரப்பு வழக்கறிஞர், எங்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையையும் பரிசீலித்து விசாரிக்க வேண்டும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு நல ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை ஆய்வு செய்கிறோம். அப்போது இரு தரப்புக்கும் தலா 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் வாதங்களை முன்வைக்க வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: