×

வேளச்சேரியில் துணிகரம்; மூதாட்டியை தாக்கி 14 பவுன் கொள்ளை: டிரைவர் உள்பட 2 பேர் கைது

வேளச்சேரி: வேளச்சேரியில், வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை தாக்கி 14 பவுன் நகைகள் திருடிய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்ததால் வேலை செய்த வீட்டிலேயே இந்த கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்தது.
வேளச்சேரி, ஷேசாத்ரிபுரம் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருபவர் இந்துமதி (68). இவர் கடந்த 30ம் தேதி, வீட்டில் இருந்தபோது 2 வாலிபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்தனர். இந்துமதியை சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்த செயின், வளையல், கம்மல் என 14 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பினர்.

சம்பவம் குறித்து வேளச்சேரி காவல்‌ நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அவற்றை இந்துமதியிடம் காட்டி விசாரித்தபோது, அவரது வீட்டில் டிரைவராக வேலை செய்த இஸ்மாயில் (36) என்பது தெரிந்தது. அவரை பிடிப்பதற்காக, அவர் வசிக்கும் கோடம்பாக்கம் காவாங்கரைக்கு சென்றனர். அங்கு இல்லை. தேனிக்கு தலைமறைவானது தெரிந்தது.

இதையடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள இஸ்மாயிலின் நண்பர் உதவியை போலீசார் நாடினர். சிம் கார்டு வாங்க வருவது போன்று இஸ்மாயிலை போலீசார் வரவழைத்தனர். அவர் வந்ததும் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த அப்துல் சலாம் (35) என்பவரையும் கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு: இஸ்மாயில் மனைவி விஜி. இவர் இந்துமதியின் அக்கா வீட்டில் வேலை செய்து வருகிறார். அவர்களுக்கு டிரைவர் தேவை என்று அழைத்தால் இஸ்மாயில் செல்வது வழக்கம். இந்துமதி வீட்டிலும் டிரைவராக இஸ்மாயில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இஸ்மாயிலுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் ஏற்பட்டுள்ளது. அதில் விளையாடி ரூ.2 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வேலைக்கும் செல்லாமல் சுற்றி வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன் நண்பருடன்
வடபழனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது சலாம் (35) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம், குடிபோதையில் தனது பிரச்னையை இஸ்மாயில் கூறியுள்ளார்.

சலாமும், பணம் திருடி ஜாலியாக இருக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி இருவரும், இந்துமதியிடம் நகையை பறிக்க திட்டமிட்டு கடந்த 30ம் தேதி, அவரது வீட்டுக்கு சென்று நகைகளை பறித்து சென்றுள்ளனர். இவ்வாறு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செயின், வளையல், கம்மல் என 14 பவுன் நகைகளை மீட்டனர். ஏற்கனவே சலாம் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Velachery , Venture in Velachery; Robbery of 14 pounds by assaulting an old woman: 2 people including the driver arrested
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...