
அண்ணாநகர்: சென்னை கோயம்பேட்டில் ஜவுளி கடையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றை கிலோ கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. டி.பி.சத்திரத்திலும் கஞ்சா விற்றதாக ரவுடி கும்பல் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக கோயம்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன், எஸ்ஐ பூபதி தலைமையில் போலீசார், நேற்று மாறு வேடத்தில் ஜவுளி கடை அருகே கண்காணித்தனர். அப்போது, ஜவுளி கடைக்கு வரும் வாலிபர்கள், கஞ்சா பொட்டலங்களை வாங்கி செல்வது தெரிந்தது. உடனே போலீசார், கடைக்குள் சென்று கஞ்சாவுடன் இருந்த 2 பேரை கையும் களவுமாக கைது செய்தனர்.
இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள், அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் (21), மதுரவாயலை சேர்ந்த இம்ரான்கான் (25) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து ஜவுளி கடையில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றை கிலோ கஞ்சா, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறைசாலையில் அடைத்தனர்.
* சென்னை டி.பி.சத்திரம் சுடுகாட்டில் ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக டி.பி சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. உடனே இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் தலைமையில் போலீசார் நேற்று மாறுவேடத்தில் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அங்கு 3 வாலிபர்கள் கஞ்சாவை பொட்டலங்களாக மடித்து விற்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கினர். இருவர் மட்டும் சிக்கினர். அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள், அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சிவா (எ) சிவகுமார் (22), டி.பி.சத்திரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கங்கு (எ) கார்த்திக் (23) என்பதும், பிரபல ரவுடி ரோகித்ராஜின் கூட்டாளி என்றும் சிறையில் இருக்கும் அவர்தான், கஞ்சா விற்க சொன்னதும் தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.