×

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு: டெல்டாவில் 5,500 பேர் முகாம்களில் தஞ்சம்: திருச்சி, மயிலாடுதுறையில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

தஞ்சை: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரூர், மயிலாடுதுறை, தஞ்சையில் சுமார் 5,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி, மயிலாடுதுறையில் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05 அடியாகவும் நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாகவும் உள்ளது.

முக்கொம்புக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 2,55,588 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இங்கிருந்து காவிரியில் 66,396 கன அடியும், கொள்ளிடத்தில் 1,38,712 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லணைக்கு 70ஆயிரம் கன அடி வருகிறது. இங்கிருந்து காவிரியில் 7,003 கன அடி, வெண்ணாற்றில 7,005 கன அடி, கல்லணை கால்வாயில் 2,019 கன அடி, கொள்ளிடத்தில் 53,620 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி, தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோரங்களில் உள்ள ெபாதுமக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய 6 தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது திருக்காட்டுப்பள்ளி அருகே சுக்காம்பார் பகுதியில் 8 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இரவு உணவும், இன்று காலை உணவும் வழங்கப்பட்டது.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் நஞ்சை புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள 150 குடும்பங்களை சேர்ந்த 500 பேர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 26 கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடக்கரையில் உள்ள அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடு, சந்தப்படுகை, திட்டுபடுகை, பாலூரான்படுகை உள்ளிட்ட கிராமங்களில் 5ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களும் முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கூகூர், இடையாற்றுமங்கலம், அன்பில், செங்கரையூர், ஆனந்திமேடு ஆகிய பகுதிகளில் உள்ள கரையோர பகுதியில் கரையை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக 2000 மணல் மூட்டைகள் தயாராக உள்ளது. புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் தின்னகுளம், விரகாலூர், ஆலம்பாடி ஆகிய உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்துக்கு வந்துள்ளனர். அதேபோல் திருச்சிக்கு நேற்று 44 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்கள் கலையரங்கம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நான்காவது பட்டாலியன் கமாண்டன்ட் கபில்வர்மா உத்தரவின்பேரில் வந்துள்ள இக்குழுவில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ தலைமையில் 22 பேர் நகர பகுதியிலும், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ தலைமையில் 22 ேபர் புறநகர் பகுதியிலும் மீட்பு பணிகள் ஈடுபட உள்ளனர்.

ஒகேனக்கல்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1.80லட்சம் கனஅடியாக உள்ளது. அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்குள்ள அருவிகள் மூழ்கிய நிலையில், அருவிக்கு செல்லும் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மீனவர்கள் முடக்கம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் முடங்கியுள்ளனர். கோட்டையூர், பண்ணவாடி, சேத்துகுழி, சின்னமேட்டூர், மாசிலாபாளையம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில். மூன்றாவது நாளாக இன்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மழை பாதிப்புகள் அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டம் வந்துள்ளனர். இவர்கள் குந்தா மற்றும் கூடலூர் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முகாமிட்டுள்ளனர்.

வால்பாறை: தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார்.

Tags : Kollid ,Mayiladuthurai ,Trichy , Cauvery floods in Kollid: 5,500 people shelter in camps in delta: Disaster response team on standby in Trichy, Mayiladuthurai
× RELATED கொள்ளிடம் பகுதியில் மலைபோல் தேங்கி...