×

சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மெரினா உள்ளிட்ட 3 கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.  மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 28 வகையான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் பொதுமக்கள் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவு வந்து செல்கின்றனர். சென்னை மெரீனா கடற்கரை உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை. சென்னைக்கு வருகை தரும் பன்னாட்டு சுற்றுலா பயணிகளும் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் மெரீனா கடற்கரையில் பொதுமக்களுக்கான வியாபாரக் கடைகளும் உள்ளன.

இந்தக் கடைகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாலும், அதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடற்கரையில் தூக்கி எறிவதாலும் அல்லது விட்டுச் செல்வதாலும், கடலில் கலந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் ஏற்கனவே அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தக் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் 05.08.2022 முதல் மாநகராட்சியின் சார்பில் மெரீனா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை, மாலை என இருவேளைகளில் ஆய்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், அதிகப்பட்ச அபராதமும் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் அல்லது பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

மெரீனா கடற்கரையில் இன்று  காலை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 68 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 18 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.1,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 27.07.2022 முதல் 02.08.2022 வரை ஒருவாரக் காலத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 6,478 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 2,548 உரிமையாளர்களிடமிருந்து 1,861 கிலோகிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.9,17,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விவரங்கள்

வ. எண்    

மண்டலம்    ஆய்வு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள் எண்ணிக்கை    அபராதம் விதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்
(கி.கி)    விதிக்கப்பட்ட அபராதம்
(ரூ)
1    திருவொற்றியூர்    74    73    8    14,900
2    மணலி    93    42    21    40,000
3    மாதவரம்    184    156    69    45,000
4    தண்டையார்பேட்டை    286    286    147    74,900
5    இராயபுரம்    184    48    652    67,800
6    திரு.வி.க.நகர்    1,237    279    120    69,600
7    அம்பத்தூர்    501    188    52    52,600
8    அண்ணாநகர்    722    192    125    99,400
9    தேனாம்பேட்டை    920    190    253    75,000
10    கோடம்பாக்கம்    482    116    144    1,01,000
11    வளசரவாக்கம்    378    164    88    66,500
12    ஆலந்தூர்    112    89    47    37,100
13    அடையாறு    597    431    78    1,13,300
14    பெருங்குடி    481    227    49    51,500
15    சோழிங்கநல்லூர்    227    67    9    8,500
மொத்தம்    6,478    2,548    1,861    9,17,100

Tags : Chennai Marina ,Besant Nagar , Chennai Marina, Beach, Plastic, Municipal Corporation Warning
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...