காவிரி ஆற்றில் வெள்ளம் செல்லும் இடங்களில் முன்னெச்சரிக்கை; சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரம் விழுந்ததால் 150 மின்மாற்றிகள் சேதமாகியுள்ளது.

இன்று மாலைக்குள் மரங்கள் அகற்றப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்படும். காவிரி கரையோரப் பகுதிகளில் நீர் வடிந்தவுடன் மின் விநியோகம் தொடங்கும். தமிழ்நாட்டில் மழை காரணமாக மின்நுகர்வு குறைந்துள்ளது. காற்றாலை மூலம் 5100 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி நடைபெறுகிறது. சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு காவிரி கரையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

சீரான மின்சாரம் விநியோகிக்க 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் பதிக்கும் பணி முடிவடைந்ததும் மீதமுள்ள மாவட்டங்களின் விவரங்கள் மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை - மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ச்சர் நிலையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Related Stories: