குடியரசு துணைத் தலைவர் தேர்தல்!: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு..!!

ஐதராபாத்:  எதிர்க்கட்சிகள் சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வாவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். டி.ஆர்.எஸ். எம்.பி.க்கள் 16 பேர் மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணை தலைவரை தேர்ந்தெடுக்‍க நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தங்காரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரான மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனிடையே, எதிர்க்‍கட்சிகளின் வேட்பாளரான மார்கரெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்‍கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஒவ்வொரு எம்.பிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் துணை தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு அளித்துள்ளார். முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக, டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

Related Stories: