வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம், ஆடிவெள்ளியொட்டி பூக்கள் விலை உயர்வு-மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

வேலூர் : வேலூர் நேதாஜி பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம், 3வது ஆடிவெள்ளியையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. வரலட்சுமி விரதம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து வரலட்சுமியை வழிபடுவார்கள். கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். வரலட்சுமி விரதம் மற்றும் 3வது ஆடிவெள்ளிக்கிழமையொட்டி பல்வேறு கோயிலில் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தது.

 அதன்படி, கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கிலோ ₹100 முதல் ₹120 வரை விற்பனையான(300 கிராம்) மல்லி நேற்று ₹250க்கும், முல்லை ₹150ல் இருந்து ₹280க்கும் விற்பனையானது. கனகாம்பரம் ₹500 முதல் ₹600 வரை விற்பனையான நிலையில், நேற்று கிலோ ₹1000 முதல் ₹1200 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ சாமந்தி ₹100 லிருந்து ₹280க்கு விலை அதிகரித்திருந்தது. தாழம்பூ ஒன்று ₹200 முதல் ₹300 வரை விற்பனையானது. இதேபோல் பழங்கள் விலையும் கிடுகிடுவென  உயர்ந்துள்ளது.

 பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் கிருபானந்தவாரியார்  சாலை உள்பட மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

வாகனங்கள் சென்று வர முடியாமல் திணறியது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் பூக்களின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், பூக்களின் விலை இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க கூடும் என வியாயாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: