×

கனமழையால் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு-படகு இல்ல சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

ஊட்டி :  ஊட்டியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு படகு இல்ல சாலையில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.ஊட்டி நகரின் மைய பகுதியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் கோடப்பமந்து பகுதியில் துவங்கி சுமார் 3 கிமீ தூரம் சேரிங்கிராஸ், ஏடிசி என நகருக்குள் சென்று ஊட்டி ஏரியில் இணைகிறது. இந்த கால்வாயின் இரு புறங்களிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் இருந்து அனைத்து விதமான கழிவுகளையும் இதில் கொட்டி விடுகின்றனர்.

இதனால், கோடப்பமந்து கால்வாயில் அடித்துச் செல்லப்படும் அனைத்து கழிவுகளும் கால்வாயில் தேங்கி கிடக்கின்றன. இதுதவிர விளைநிலங்களில் அடித்து வர கூடிய மண் கால்வாயில் படிந்து மண் திட்டுகள் உருவாகியுள்ளன. இதனால், கால்வாயின் கொள்ளளவு குறைந்துள்ளது. அதீத கனமழை பெய்யும் சமயங்களில் இக்கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கழிவுநீருடன் மழைநீர் கலந்து கீரின்பீல்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. மத்திய பஸ் நிலையம் அருகே படகு இல்லம் செல்லும் சாலையில் ரயில்வே பாலத்திற்கு அடியிலும் மழைநீர் தேங்கி விடும்.

இங்குள்ள ரயில்வே காவல் நிலையமும் மழைநீர் முழ்கிவிடுவது வாடிக்கை. இந்நிலையில், ஒரு வார இடைவெளிக்கு பின் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி நகரில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடப்பமந்து கால்வாயில் வழக்கத்தை விட அதிகளவிலான நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே பாலம் அருகே சுமார் 5 அடி வரை தண்ணீர் தேங்கியது.

 இதனால், படகு இல்லம், காந்தல், தீட்டுக்கல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகனங்களை திருப்பி அனுப்பினர். அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்தும் பர்ன்ஹில் வழியாக திருப்பி விடப்பட்டன.

Tags : Kodappamandu , Ooty: Due to continuous rains in Ooty, Kodappamandu canal has flooded and boat house road is surrounded by rain water.
× RELATED லோயர் பஜார் சாலையில்...