×

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்காததால் தென்னை நார் கயிறு தயாரிப்பு தொழில் முடக்கம்-தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

தர்மபுரி :  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால், தென்னை நார் கயிறு தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அதிகம் கயிறு தயாரிக்கப்படுகிறது. கயிறு உற்பத்தியில், தர்மபுரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் மட்டை பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருளாக பயன்படுகிறது. தேங்காய் மட்டையில் நார் பிரித்தெடுத்தல், நாரில் இருந்து கயிறு தயாரித்தல், முறுக்கேற்றப்பட்ட கயிறு, மெத்தைக்கான நார், மிதியடிகள் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், அரசம்பட்டி ஆகிய இடங்களிலும் தேங்காய் நார் கயிறு தயாரித்தல் மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட இயங்கி வருகின்றன. இத்தொழில் மூலம் ஆயிரகணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இயந்திரங்கள் மூலமாகவும், பழைய முறைப்படி கருவிகள் கொண்டு ஆண்கள், பெண்கள் கயிறுகளை தயாரிக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கயிறு, மெத்தைக்கான நார், மிதியடிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக கோவை, கேரளா வழியாக சீனா, ஐரோப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. கொரோனா காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் கிடைக்காமல், ஏற்றுமதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சிறு ஆலைகள் இயங்காததால், தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இந்நிலையில், ெகாரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, தற்போது கயிறு ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால், ரஷ்யா - உக்ரைன் போரால் மீண்டும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடியாலும், ஏற்றுமதியில் கயிறு தொழில் பல்வேறு நெருக்கடியை சந்தித்துள்ளது. பீகார், கல்கத்தா, பெங்களூரு, மகாராஷ்டிரா, ஐதராபாத் போன்ற பகுதிகளுக்கு, தர்மபுரியில் தயாரிக்கப்படும் கயிறுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் சேலம், சென்னை, ஓசூருக்கு அனுப்பப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ₹15 கோடிக்கு கயிறு வர்த்தகம் நடக்கிறது. இதுகுறித்து தென்னை நார் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கயிறு தொழில் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இத்தொழில் அரசுக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தருகிறது. குடிசை தொழிலாக பல குடும்பங்கள் இதை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு ₹24க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கயிறு, தற்போது விலை குறைந்து கிலோ ₹10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ₹15 கோடி வரை வர்த்தகம் நடந்தது. தற்போது பல்வேறு காரணங்களால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இதனால் கயிறுகள் குடோன்களில் தேங்கியதுடன், விலையும் பாதிக்கும் மேல் சரிந்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் நடத்தி வருபவர்கள், வங்கிக்கு  தவணைகளை குறிப்பிட்ட நேரங்களில் செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் கயிறு தொழில் மீது கவனம் செலுத்தி, உதவிகளை வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கயிறு தயாரிக்கும் முறை

தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து ஆண்டுக்கு 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்கிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர் விட்டு ஊற வைத்து, இரண்டு, மூன்று மணிநேரம் கழித்து வில்லோயிங் எனப்படும் மரத்திலான இயந்திரத்தில் போட்டு அடிக்கப்பட்டால், நார் கிடைக்கிறது. அதன் பிறகு அந்த நாரை, சில்வரிங் மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து திரித்தால் தேவைக்கேற்ற அளவுகளில் கயிறு கிடைக்கும். சிறிய மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்களில் வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் மூலமாகவே கயிறு தயாரிக்கப்படுகிறது.



Tags : Krishnagiri ,Coconut ,Rope Manufacturing Industry Paralymp-Darmapuri , Dharmapuri: Due to inability to export to foreign countries, the coir rope manufacturing industry has come to a standstill. Because of this, Dharmapuri et al
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி