×

வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து நாடு முழுவதும் காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் இன்று டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். காரைக்குடி, தூத்துக்குடி, அந்தியூர், நாமக்கல், திருப்பூர், கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியிலும் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக பேரணியாக சென்றுள்ளனர். முன்னதாக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது. மேலும், ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் பிற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.


Tags : Price rise, unemployment, Congress party, protest
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...