×

செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்ததில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை சந்திப்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் அருகே பள்ளி, கல்லூரிகள், பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகள், மாவட்ட மைய நூலகம், டவுன் போலீஸ்ஸ்டேஷன், செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம், உழவர் சந்தை, கடை வீதிகள் என முக்கிய அலுவலகங்கள் உள்ளன. இந்த பேருந்து நிலையத்தில் சென்னை - தாம்பரம் வேலூர், திருப்பதி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்வதும், ஏற்றி செல்வதும் வழக்கம். அதேபோன்று பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்பாக்கம், திண்டிவனம் ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் நேரடியாக இயக்கப்படுகிறது.

இதனால் பேருந்து நிலையத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டமாக, பயணிகள் கூட்டமாக இருக்கும் இந்த பேருந்து நிலையம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்புகள் சூழ்ந்து பொதுமக்கள், பஸ் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.பேருந்து நிலையத்தை சுற்றி பல்வேறு கடைகளான, டீக்கடை, டிபன் கடை, வணிக கடைகள் என ஏராளமாக உள்ளதால் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. கடைகளில் தினமும் வெளியேற்றப்படும் கழிவுநீர், பேருந்து நிலையத்தில் ஊற்றுவதாலும், பேருந்து நிலையம்  தரைப்பகுதிகள் மண் தரையாக உள்ளதாலும், சேரும் சகதியுமாக  ஆக மாறி பஸ் பயணிகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், அரசு பேருந்துகளுக்கு தடையாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். பஸ் பயணிகளுக்கு தேவையான நிழற்குடைகள், பஸ் நின்று செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chengalpattu Old Bus Stop , Encroachment shops at Chengalpattu Old Bus Stop should be removed; Public demand
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து...