கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாத பேருந்துகளால் நடுரோட்டில் காத்திருக்கும் பள்ளி மாணவர்கள்; விபத்து ஏற்படும் அபாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரம் ரூ. 2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் கடந்த 2012ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் சென்னை, தாம்பரம், கோயம்பேடு, தி.நகர், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 75க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன. அதுமட்டுமல்லாமல், செங்கல்பட்டு உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதற்காக இங்கு நவீன கட்டண கழிப்பிட வசதி, இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, பயணிகள் தங்கும் வசதி,  தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், எந்த பேருந்துகளும் உள்ளே வந்து செல்லாமல் நடுரோட்டிலேயே பஸ்சை, நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும், ஷேர் ஆட்டோ, வேன் மற்றும் தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டுகொண்டு ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் விபத்தை உணராமல், நடுரோட்டுக்கு வந்து பஸ் ஏற,  மணிக்கணக்கில் காத்துகிடக்கின்றனர். இதனால், எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்வதில்லை. சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டு உலக தரம் வாய்ந்த ஐஎஸ்ஓ சான்று பெற்ற கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்துக்குள் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே கட்டப்பட்டது. அதன் மூலம் நகராட்சி நிர்வாகத்தினர் வாடகை வசூலித்து வருகின்றனர். ஆனால், சில கடைகாரர்கள் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து, கூடுதல் கடைகளை கட்டி, மேல் வாடகைக்கு விட்டு வருகின்றனர். இதனால், பஸ் பேருந்து நிலையமும் குறுகிவிட்டது.

இதனால், பஸ்கள் உள்ளே வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோ, வேன், தனியார் பேருந்துகள், பைக்குகள் உள்பட பல்வேறு வாகனங்களை மணிக்கணக்கில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவைகளை காரணம் காட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து டிரைவர்கள் உள்ளே வர மறுக்கின்றனர். மேலும், வெயில் மற்றும் மழை காலங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் பஸ் பயணிகள் பஸ்சுக்காக கூட்டம், கூட்டமாக நிற்கின்றனர். இதில், மாணவர்களை கண்டதும் சில பஸ் டிரைவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்று விடுகின்றனர். சில பஸ்கள், 100 அடி தூரம் சென்று நிறுத்துகின்றனர். இதில் மாணவ, மாணவிகள் ஓடிச்சென்று ஏறுவதற்குள் பஸ்சை எடுத்து விடுகின்றனர். பல பேருந்துகளில் தானியங்கி கதவு இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்ல வேண்டிய அவலநிலையும் உள்ளது.

 கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை  ஏற்கனவே, நான்கு வழி சாலையாக இருந்த நிலையில் தற்போது, எட்டு வழி சாலையாக மாற்றப்பட்டிருக்கிறது. அப்படி இருப்பினும்,  பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று வெளியே வராத பேருந்துளால் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் வழக்கம் போல நடுரோட்டில் நிற்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே பேராபத்து ஏற்படுவதற்கும் முன்பு, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து  வலியுறுத்துகின்றனர்.

Related Stories: