நாவலூர் பகுதியில் கல்லூரி மாணவனிடம் கத்தியை காட்டி செல்போன் பறிப்பு; இருவர் கைது

ஸ்ரீ பெரும்புதூர்: நாவலூர் பகுதியில் கத்தியை காட்டி கல்லூரி மாணவனிடம்  செல்போன் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த வெள்ளாரை கிராமத்தை சேர்ந்தவர் சரண் (18). இவர்,ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பைக்கில் தாம்பரம் - ஸ்ரீ பெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். நாவலூர் வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் சரணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஸ்ரீ பெரும்புதூர் காவல் நிலையத்தில் சரண் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் (18), காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த ஜீவா (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இருவரிடம் விசாரணை செய்ததில், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரிடமிருந்து கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய பைக், செல்போன், பணம் பறிமுதல் செய்து ஸ்ரீ பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: