சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் பூஜைகள் எம்எல்ஏ பங்கேற்பு

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் பூஜைகள் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற .பாலசுப்பிரமணிசுவாமி  கோயில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கு, சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தின் முன்னோட்டமாக மூலவர் சன்னதியை புனரமைப்பதற்காக பாலாலயம் பூஜைகள் காஞ்சிபுரம் பெருநகர் குருக்கள் பாலாஜி சிறுவாபுரி முருகன் கோயிலின் தலைமை குருக்கள் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு புனரமைப்பு பணிகளுக்காக மூலவர் சன்னதி மூடப்பட்டது. தொடர்ந்து அத்திப்பலகையில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வருகின்ற 21ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தவுள்ள நிலையில், சிவாச்சார்யார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது.

நிகழ்ச்சியில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரன், இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சித்ராதேவி, கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, ஆலய சபதி நடராஜன் மற்றும் கிராம பெரியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: