7 ஆண்டில் 9.24 லட்சம் பேர் குடியுரிமையை ஒப்படைத்தனர்: ‘டாட்டா’ காட்டும் இந்தியர்கள்; வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு காரணமா?

உலகை ஆள்பவர்கள் இந்தியர்கள் என்றால் நம்புவீர்களா? ஆம், இன்று உலகமே இந்தியர்களின் வழிகாட்டுதல்களில் தான் நடந்து வருகிறது. உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. இந்தியாவில் பள்ளி கல்வி, பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்கள், தொழில் மற்றும் மேற்படிப்பு தொடர வெளிநாட்டிற்கு பறக்கின்றனர். அங்குள்ள சுற்றுச்சூழல், பணி சூழல், வருமானம், உள்கட்டமைப்பு, பணி நேரங்கள், கை நிறைய சம்பளம், நல்ல கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கேயே செட்டிலாகி, உலகில் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழில்நுட்பம், விஞ்ஞானம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்கள் கண்டுபிடிப்பை பார்த்து வியக்கும் உலக நாடுகள், பல்வேறு சலுகைகளை வழங்கி தங்கள் பக்கம் இழுக்கிறது. இதனால், கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவின் குடியுரிமையை துறந்து 9.24 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு வாழும் மக்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப (வெளிநாடுகள் உட்பட) படிப்பு, வேலை, திருமணம் செய்து கொள்ளலாம். உலகின் பல நாடுகளில் இரட்டைக்  குடியுரிமை வசதி உள்ளது. ஆனால் இந்திய குடியுரிமை சட்டத்தின்படி, ஒருவர்  வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்றால், அவர் தனது இந்திய குடியுரிமையை  விட்டுக்கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற  நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள இத்தகையவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில்  உள்ளது.கடந்த 7 ஆண்டில் மட்டும் இந்தியாவின்  குடியுரிமையை துறந்து 9.24 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை  பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக கடந்த 2021ல் மட்டும் 1.6 லட்சம்  இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை துறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 643 இந்தியர்கள் தங்கள்  குடியுரிமையை விட்டு கொடுத்துள்ளனர். இவர்கள் 120க்கும் அதிகமான  நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளதால் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 1 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். 64,071 பேர் கனடா குடியுரிமையும், 58,391 பேர் ஆஸ்திரேலியாவிலும், 35 ஆயிரத்து 435 பேர் பிரிட்டனிலும்  குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர 12,131 பேர் இத்தாலியிலும், 8,882 பேர்  நியூசிலாந்திலும், 7,046 பேர் சிங்கப்பூரிலும், 6,690 பேர் ஜெர்மனியிலும்,  3,54 பேர் ஸ்வீடனிலும், 48 பேர் பாகிஸ்தானிலும் குடியுரிமை பெற்றுள்ளனர். இதுதவிர பிற நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

குறிப்பாக 2015 முதல் 2021 வரை கடந்த 7 ஆண்டுகளில்  மொத்தம் 9.24 லட்சம் பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2021 ஆண்டு  மட்டும் இந்தியாவில் இருந்து 1,63,370 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக, 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடா குடியுரிமையும், 300 பேர் சீனா குடியுரிமையும், 41 பேர் பாகிஸ்தான் குடியுரிமையையும் பெற்றுள்ளனர். இதன்மூலம் ஒரு ஆண்டில் அதிகமானவர்கள் குடியுரிமையை துறந்த பட்டியலில் 2021 அதிக எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக கடந்த 2019ல் 1,44,17 பேராகவும், 2020ல் 85,256  பேராகவும் இருந்தது.

* ஏன் கைவிடுகிறார்கள்?

நாட்டில் தற்போது வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, மூலை மூடுக்கெல்லாம் செல்லாத கல்வி, வறுமை, பொருளாதார சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் தவித்து வருகின்றனர். தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே கல்வி தரம் நன்றாக உள்ளது. வடமாநிலங்களில் வறுமை மட்டுமே அதிகமாக உள்ளது. உலகில் முன்னணி நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ள இந்தியர்கள் பெரும்பாலும் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான். இந்தியர்களின் உழைப்பு, அறிவு உள்ளிட்டவற்றியின் முக்கியத்துவத்தை அறிந்து வெளிநாடுகள் வளைத்து போடுகிறார்கள். இதனால், இந்தியாவின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

* வளர்ச்சி தேவை

நாட்டில் தற்போது வளர்ச்சியை நோக்கி பாதையை உருவாக்காமல், பதவிக்காக போடும் அரசியல் சண்டைதான் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளுடன் நீயா?நானா? என்ற போட்டி போட்டால் உலகின் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இப்போது, உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்புகிறது. சமீப காலமாக குறிப்பிட்ட சில துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகவும், உலக அரங்கில் அவர்களின் எதிரிகளை பழி வாங்கவும் இந்தியாவின் தயவை முன்னணி நாடுகள் நாடுகிறது. இது, அரசியல் ரீதியான நகர்வுதான். ஆனால், நம் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு, முன்னணி நாடுகளையே ஆட்டம் காணும் வகையில் அசுர வளர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு நடந்தால், இந்திய குடியுரிமை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன், இந்திய குடியுரிமையை விட்டுச் சென்றவர்கள் கூட மீண்டும் குடியுரிமையை கேட்டு வருவார்கள்.

* தீவு வாழ்க்கை

நாடு தற்போது 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இப்போது, நாட்டின் பல்வேறு கிராமங்களில் மின்சாரம், சாலை, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. ‘சட்டம் அனைவருக்கும் சமம்’ என்று சொல்கிறது. ஆனால், அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதில்லை. ஏன், நம் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள முர்முவின் கிராமத்துக்கே இப்போதுதான் மின்சாரம் கிடைத்துள்ளது. நாட்டின் மூலை மூடுக்கில் வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அடிப்படை வசதிகள் கிடைத்தால் மட்டுமே நாம் வளர்ச்சியை நோக்கி ஒருபடி வெற்றிகரமாக முடித்ததாக கருதலாம். ஆனால், குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மட்டுமே நாட்டை கூறு போட்டு ஒரு தீவு வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர்.

* ஏழை, ஏழைதான்

குறிப்பாக ஒரு தொழிலதிபர் குஜராத்தில் தொழில் தொடங்கி இன்று உலகையே தன் கைக்குள் போட்டு பில்கேட்சையே முந்தி விட்டார். இவருக்கு நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தில் இருக்கும் நபர், வெளிநாடுகளுக்கு சிபாரிசு செய்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களுக்காக திட்டம் போடாமல் ஒரு சில தொழிலதிபர்களுக்காக திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்காக நாட்டின் பொதுப்பணித்துறை நிறுவனங்களும் விற்கப்படுகிறது. நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் மீது பணக்காரர்களை வரை பாதிக்காத வகையில் வளர்ச்சியை கொண்டு செல்வதுதான் சிறந்த நிர்வாகம். ஆனால், நம் நாட்டில் பணக்காரர்கள் மட்டுமே பணக்காரர்கள் ஆகிறார்கள். ஏழைகள், ஏழைகளாகத்தான் இருக்கிறான். ‘இளைஞர்களை என் கையில் கொடுங்கள். நான் இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுகிறேன்’ என மக்களின் ஜனாதிபதி என்று போற்றப்பட்ட அப்துல் கலாம் சொன்னார். அவர் இருந்திருந்தால் இந்தியா இன்று வல்லரசு பாதையில் சென்று இருக்கும்.

* ஓசிஐ பெற்றவர்கள் இந்தியாவில் 4 விஷயங்களை செய்ய முடியாது

1. தேர்தலில் போட்டியிட முடியாது

2. வாக்களிக்க முடியாது

3. அரசு வேலை அல்லது அரசியலமைப்பு பதவியை வகிக்க முடியாது

4. விவசாய நிலத்தை வாங்க முடியாது.

* ஏன் செல்கிறார்கள் வாழ்க்கைத் தரம் நல்ல கல்வி சிறந்த வாய்ப்புகள் நல்ல பணிச்சூழல் கை நிறைய சம்பளம்

* 92 பணக்காரர்களின் சொத்து 55 கோடி இந்தியர்களுக்கு சமம்

விலைவாசி உயர்வு குறித்து சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த காரசார விவாதத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.

அதன் விவரம் வருமாறு:

* ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வரப்பட்டனர். 2021ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், 23 கோடி மக்கள் மீண்டும் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்று உள்ளனர்.

* கடந்தாண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ள நிலையில், கீழ்நிலையில் உள்ளவர்களின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

* நாட்டின் 77 சதவீத செல்வம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது.

* இந்தியாவில் உள்ள 92 பணக்காரர்களின் சொத்து 55  கோடி இந்தியர்களின் சொத்துக்கு சமமாக உள்ளது.

* பணமதிப்பிழப்பு பிறகு, ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு கொண்டு வந்ததால், 2.30 லட்சம் சிறு தொழில்களும், வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

* விலைவாசி உயர்வால்  நாட்டின் 25 கோடி குடும்பங்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* வளர்ந்த நாடுகளின் பட்டியலில் சேர, ஒரு நாட்டின் தகுதியான மக்கள் தொகையில்  மூன்றில் இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இன்று வெறும் 40 கோடி பேருக்கு மட்டுமே வேலை இருக்கிறது.

* வளர்ந்த நாடாக மாற, நாட்டில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 84 கோடியாக அதிகரிக்க வேண்டும்.

முன்னணி நிறுவனங்களை அலங்கரித்த இந்தியர்கள்

நிறுவனம் (பொறுப்பு)    பெயர்    ஊர்

கூகுள் (சிஇஓ)    சுந்தர் பிச்சை    மதுரை

டிவிட்டர் (சிஇஓ)    பராக் அகர்வால்    ராஜஸ்தான்

மைக்ரோசாப்ட் (சிஇஓ)    சத்யா நாதெள்ளா    ஐதராபாத்

அடோப் (சிஇஓ)    சந்தனு நாராயண்    ஐதராபாத்

ஐபிஎம் (சிஇஓ)    அரவிந்த் கிருஷ்ணா    ஐதராபாத்

மைக்ரான் டெக்னாலஜி (சிஇஓ)    சஞ்சய் மெஹ்ரோத்ரா    கான்பூர்

விஎம்வேர் (சிஇஓ)    ரகு ரகுராம்         மும்பை

பாலோ ஆல்டோ (சிஇஓ)    நிகேஷ் அரோரா    உ.பி.

அரிஸ்டா நெர்வொர்க் (சிஇஓ)    ஜெயஸ்ரீ உலால்    லண்டன்

(இந்திய வம்சாவளி)

நெட் ஆப் (சிஇஓ)    ஜார்ஜ்குரியன்    கேரளா

பிளக்ஸ் (சிஇஓ)    ரேவதி அத்வைதி    சென்னை

விமியோ (சிஇஓ)    அஞ்சலி சட்    அமெரிக்கா

(இந்திய வம்சாவளி)

வேலையின்மை விகிதம் (%)

மாதம்    இந்தியா    நகரம்    கிராமம்

ஜூன் 2022    7.80    7.30    8.03

மே 2022    7.12    8.21    6.62

ஏப்ரல் 2022    7.83    9.22          7.18

மார்ச் 2022    7.57    8.28    7.24

பிப்ரவரி 2022    8.11    7.57    8.37

ஜனவரி 2022    6.56    8.14    5.83

டிசம்பர் 2021    7.91    9.30    7.28

நவம்பர் 2021    6.97    8.20    6.41

அக். 2021    7.74    7.37    7.91

செப். 2021    6.86    8.64    6.04

ஆகஸ்ட் 2021    8.32    9.78    7.64

ஜூலை 2021    6.96    8.32    6.34

* ஓசிஐ கார்டு என்றால் என்ன?

இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்குவது இல்லை. இந்திய குடியுரிமையை கைவிட்ட பிறகு இவர்களுக்கு ஓசிஐ (ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா) கார்டு வழங்கப்படுகிறது. ஓசிஐ, இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் எல்லா வகையான பொருளாதார பரிவர்த்தனைகளை செய்வதற்கும் அனுமதிக்கிறது. ஓசிஐ வைத்திருப்பவர் எப்போது வேண்டுமானாலும் விசா இல்லாமல் இந்தியாவுக்கு வரலாம். இது, அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய குடிமக்களைப் போலவே எல்லா உரிமைகளும் உள்ளன.

Related Stories: