×

சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த இன்ஜினியர் சஞ்சய்பிரகாஷ் (24), எருமாபாளையத்தை சேர்ந்த பிசிஏ பட்டதாரி நவீன்சக்கரவர்த்தி (25) ஆகியோர், ஏற்காடு அடிவாரம் குரும்பப்பட்டி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து யூடியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்துள்ளனர். இவர்களையும் உடந்தையாக இருந்த அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த கபிலனையும் (25) ஓமலூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சேலம் கியூ பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது, தனி இயக்கம் நடத்த முடிவு செய்து யூடியூப்பை பார்த்து துப்பாக்கிகளை தயாரித்ததாகவும், மக்களை திரட்டி ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து என்ஐஏ பிரிவை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ உள்பட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று சேலம் வந்து, துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். முதலில் விசாரித்த ஓமலூர் போலீசாரிடம் விவரங்களை கேட்டு ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். கைதான 3 பேரின் உறவினர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சிறையில் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : NIA ,Salem , NIA about 3 people who rented a house in Salem and made guns. Officials investigate
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...