சபரிமலை கோயிலில் நிறை புத்தரிசி பூஜை: பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து, வறுமை நீங்குவதற்காக இது நடத்தப்படுகிறது. புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டு கோயிலில் பூஜை நடத்தப்படும். பின்னர், அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இவ்வருட நிறை புத்தரிசி பூஜை நேற்று நடந்தது. இதற்காக, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. பின்னர், பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவிந்தனர்.

* திடீர் கட்டுப்பாடு

கனமழையால் பம்பை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 6 மணியளவில் சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அனைவரும் பம்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related Stories: