×

சட்ட விரோத பண பரிவர்த்தனை சிவசேனா எம்பி ராவத் மனைவிக்கும் சம்மன்

மும்பை: சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் அரசிடம் ஒப்பந்தம் பெற்ற பத்ரா சாவல் சொசைட்டி, குரு ஆசிஷ் கட்டுமான நிறுவனம் ஆகியவை, மக்களிடம் ரூ.1037 கோடியை வசூலித்து மோசடி செய்துள்ளது. இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் சிவசேனா மூத்த தலைவரும், எம்பி.யுமான சஞ்சய் ராவத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி உள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் இந்த மோசடி பணத்தில் ராவத்தின் மனைவி வர்ஷாவும் ரூ.83 லட்சம் வாங்கி, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக ராவத்திடம் கடந்த மாதம் 31ம் தேதி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது. அவரின் 4 நாள் விசாரணை காவல் முடிந்ததால், நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வரும் 10ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கேட்டது.

அதை நிராகரித்த நீதிபதி, வரும் 8ம் தேதி வரை விசாரிக்க அனுமதி வழங்கினார். இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக ராவத்தின் மனைவி வர்ஷாவிடமும் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜன்னலே இல்லாத  அறையில் அடைப்பு: நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, ஜன்னலும், காற்றோட்டமும் இல்லாத அறையில் அமலாக்கத் துறையினர் தன்னை அடைத்து வைத்திருந்ததாக ராவத் குற்றம்சாட்டினார். ஆனால், ‘அவர் அறையில் ஏசி இருப்பதால் ஜன்னல் இல்லை,’ என அமலாக்கத் துறை விளக்கம் அளித்தது.

Tags : Shiv Sena ,MP Rawat , Illegal money transaction Shiv Sena MP Rawat's wife also summoned
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...