×

என்.வி. ரமணா பரிந்துரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் யு.யு.லலித்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரையின்படி, நாட்டின் 49வது புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி, பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக தனக்கு அடுத்தப்படியாக யாரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்வது நடைமுறை. தற்போது, தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா வரும் 27ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யும்படி ரமணாவுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய மூத்த நீதிபதியும், ரமணாவுக்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் இருப்பவருமான நீதிபதி யு.யு.லலித்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். இதற்கு ஒன்றிய சட்டத் துறையும், ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியதும், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக வரும் 27ம் தேதி யு.யு.லலித் பதவியேற்க உள்ளார்.

* 3 மாதங்களே நீடிப்பார்
மும்பை உயர் நீதிமன்றத்தில் 1983ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர், 1985ம் ஆண்டு டெல்லி சென்று உச்ச நீதிமன்றத்தில் வாதாட தொடங்கினார். மூத்த வழக்கறிஞர் என்ற அந்தஸ்தையும் பெற்று, 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பு வழக்கறிஞராக வாதாடினார். கடந்த 2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 13ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டார். இவர் வரும் 27ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றாலும், 3 மாதங்களே இப்பதவியில் நீடிப்பார். நவம்பர் 8ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

Tags : NV ,YU Lalit ,Chief Justice ,Supreme Court ,Ramana , NV YU Lalit becomes Chief Justice of Supreme Court on Ramana's recommendation
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...