அனைத்து மீட்பு உபகரணங்களுடன் திருச்சி செல்ல தயாராக இருக்க வேண்டும்: ஆவடி பட்டாலியனுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: கனமழை எதிரொலியாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அருகே உள்ள மக்களை மீட்கும் வகையில் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆவடி பட்டாலியன் பிரிவுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணமாக சேலம் மற்றும் எடப்பாடி நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆவடி 8வது பட்டாலியன் குழுவில் உள்ள காவலர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளுக்காக திருச்சி செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு செல்லும் ஆயுதப்படை வீரர்கள் அனைவரும் ரெயின் கோட், டார்ச் லைட், மரம் வெட்டும் இயந்திரம், சிறிய படகுகள் என அனைத்து மீட்பு உபகரணங்களுடன் செல்ல அறிவுத்தப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதற்கான உத்தரவை உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். அதன்படி ஆவடி பட்டாலியன் குழுவினர் மீட்பு பணிக்காக திருச்சி விரைந்துள்ளனர்.

Related Stories: