×

நீதிபதியை மாற்றக்கோரி மனு கொடுத்த விவகாரம் ஓ.பி.எஸ்., தரப்புக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்: நீதிமன்றத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்று நீதிபதி அதிருப்தி

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென்று தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற  உத்தரவுபடி, சென்னை ஐகோர்ட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிபதி ஏற்க மறுத்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், ஜூலை 11ம் தேதி பிறப்பித்த உத்தரவில், அவருக்கு எதிரான கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அதனால், இந்த வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம், நீதிபதியை மாற்ற வேண்டுமென்று தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது ஏற்கக்கூடியதல்ல. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை. மனுதாரரின் இந்த நடவடிக்கை நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். திருத்தம் இருந்தால் இதே நீதிமன்றத்திலேயே முறையீடு செய்திருக்கலாம். மனுதாரர் குறித்து தன் உத்தரவில் குறிப்பிட்ட தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலேயே தற்போதும் அவரது தரப்பு செயல்பாடு உள்ளது. நீதிபதியை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அளித்த கோரிக்கை குறித்த நடைமுறையை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள்.  நீதிபதி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்றார்.

அப்போது ஈ.பி.எஸ். தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், அறியாமையால் ஒரு சில வழக்கறிஞர்கள் இதுபோல செயல்படுகின்றனர். இதையடுத்து, விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, மற்றொரு மனுதாரர் வைரமுத்து கோரிக்கையின் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நாளை பிற்பகலில் விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த நிலையில், தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், நீதிபதியை மாற்ற வேண்டுமென்று தங்களிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அவரே வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார். மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிராக மீண்டும் கருத்துகளை பதிவு செய்துள்ளார். எனவே, வழக்கை உடனடியாக வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றார்.


Tags : ICourt , ICourt strongly condemns OPS, side on petition for transfer of judge: Judge disapproves of action that tarnishes court
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...