×

தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது: தமிழக ஆளுநர் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டியுள்ளார். தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்பு’ என்ற பெயரில் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.  
நிகழ்ச்சியில் ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 11 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களை பாராட்டி, அவற்றின் இயக்குனர்கள், துணைவேந்தர்கள், பிரதிநிதிகளை அழைத்து கவர்னர் ஆர்.என்.ரவி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது: இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களுக்குள் தமிழக கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த கல்வி நிறுவனங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் முதலிடம் பிடித்ததை தக்க வைத்துக்கொள்ளவேண்டும். சென்னை ஐ.ஐ.டி. மிகச்சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையை பெற்றிருக்கிறது.

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசும்போது: இந்தியாவிலேயே உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகளவில் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எண்ணிக்கையில் மட்டும் அல்ல உயர்கல்வியின் தரத்திலும் தமிழகம் உயர்ந்துள்ளது. அதை மேலும் உயர்த்தவேண்டும் என்ற முயற்சியில்தான் இந்த பாராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வெகு விரைவில் அனைவரையும் போல் தமிழில் சரளமாக பேசுவேன் என்று கவர்னர் சொல்லி இருக்கிறார். தமிழ் மொழியின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் நன்றாக புரிகிறது.



Tags : Tamil Nadu ,Governor , Foundation of higher education in Tamil Nadu is excellent: Tamil Nadu Governor praises
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து