அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கட்ட கலந்தாய்வு தொடக்கம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கு தமிழகத்தில் 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து அந்தந்த கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை அனுப்பி, அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதைத்தொடர்ந்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், 2ம் கட்ட கலந்தாய்விலும், அதிலும் நிரம்பாத இடங்கள் 3ம் கட்டத்திலும் நிரப்பப்பட உள்ளது. இறுதியாக எந்த தேதியில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவிக்கிறதோ. அன்றைய தேதியில் காலியாக இருக்கும் இடம் வரை நிரப்ப அந்தந்த கல்லூரிகள் முடிவு செய்து அதற்கேற்றபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கடும் போட்டி இருந்து வருகிறது. கலந்தாய்வு இன்று தொடக்கப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் இடங்களைவிட அதிகமான அளவில் விண்ணப்பங்கள் குவிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சென்னையில் பழமை வாய்ந்த அரசு கல்லூரியும், சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் கல்லூரிகளுக்கான பிரிவில் 3வது இடத்தை பிடித்த கல்லூரியுமான மாநில கல்லூரியில் இருக்கும் 1,106 இளங்கலை பட்டப்படிப்புக்கு இடங்களுக்கு 95 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருக்கிறது.

Related Stories: