×

தமிழகத்தில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி புகழாராம்

சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். தமிழ்நாட்டின் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று காலையில் நடந்தது. இந்த நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை செயலாளர்கள், அதிகாரிகள், துணைவேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். என்ஐஆர்எப் தரவரிசையில் முன்னணி வரிசையில் இடம்பெற்ற 11 உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி விழாவில் கௌரவித்தார்.

என்ஐஆர்எப் தரவரிசையில் இடம்பிடித்ததற்கான காரணம், செயல்பாடு பற்றி கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகிகள் கலந்துரையாடலும் நடைப்பெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவிலேயே முதல் 10 இடங்களில்  வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும்  வாழ்த்துகள். இதன் மூலம் தமிழ்நாட்டின் பெயரை வெளியில் கொண்டு  வந்துள்ளீர்கள். முதல் 20 இடங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் தமிழ்நாட்டின்  பங்கு அதிகம். அவர்களுக்கும் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் உயர்கல்வியின்  அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் இடம்பிடித்தவை,  இடம்பிடிக்காதவை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். தரத்தை மேம்படுத்த  வேண்டும். தரவரிசையில் முதலிடம் பிடித்தால் அதை தக்க வைத்துக்கொள்ள  வேண்டும்.
மிகச்சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் சிறந்த அடையாளம்,  பெருமையைப் பெற்றுள்ளது சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்,  சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து செயல்பட வேண்டும்.ஆராய்ச்சி, கல்வி  போன்றவற்றில் உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட  வேண்டும். சிறந்த கருத்துரு, யோசனைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்மூலம்  ஒன்றிணைந்த வளர்ச்சியைப் பெற முடியும். தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பல  நல்ல விஷயங்கள் மேலோங்கியுள்ளன. அவற்றை பின்பற்றலாம். தனியாருடன் இணைந்து  செயல்பட அரசு முன்வர வேண்டும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: உண்மையிலேயே பாராட்டப்பட  வேண்டிய நிகழ்ச்சி இது. மத்திய அரசின் சர்வே அடிப்படையில், இந்தியாவிலேயே  தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 53% ஆக இருக்கிறது.  எண்ணிக்கையில் மட்டுமல்ல, உயர்கல்வியின் தரத்திலும் தமிழ்நாடு  இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. 1,000 இடங்களில் 163 உயர்கல்வி  நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையே.

இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக  சென்னை ஐ.ஐ.டி., வந்திருப்பதில் மகிழ்ச்சியே. இந்தியாவிலேயே உயர்கல்வி  தரத்தில் தமிழ்நாடே முதலிடம். தமிழ்நாட்டுக்குப் பின்னால் தான் டெல்லி  இருக்கிறது.தமிழ்நாட்டின் தரத்தை மேலும் உயர்த்தவே ஆளுநர்  இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 42,000 கோடியை கல்விக்காக  மட்டுமே ஒதுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின் பெண் கல்வியை மேம்படுத்த  மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வெகுவிரைவில்  தமிழில் நன்றாக பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார் ஆளுநர். இதிலிருந்தே  தமிழ் மீதான ஆளுநரின் ஆர்வம் தெரிகிறது.

எல்லாரும் வளர வேண்டும்,  எல்லாருக்கும் கல்வி போய் சேர வேண்டும், சிறப்பான கல்வியாக அது இருக்க  வேண்டும் என்ற அடிப்படையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தரவரிசையில் முதல் 11 இடங்களை பிடித்த  உயர்கல்வி நிறுவனங்களைப் பார்த்து பிற உயர்கல்வி நிறுவனங்களும் தரத்தில்  தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரசுக்கல்லூரிகளில் சேர  கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசும், தனியாரும் போட்டி போட்டுக்கொண்டு  கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

Tags : Tamil Nadu ,Governor RN ,Ravi Pukhazaram , The foundation of higher education in Tamil Nadu is good: Governor RN Ravi Pukhazaram
× RELATED மூன்று பல்கலைக்கழகங்களின்...