×

இக்கட்டான நிலையில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சு

கொழும்பு: இக்கட்டான நிலையில் உதவிக்கரம் நீட்டிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை தொடர்ந்தனர். இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார். பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 20ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கிடையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதனால் தற்காலிக தீர்வு கிடைத்தாலும், நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. கடந்த ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு 400 கோடி டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பேசும்போது, ‘இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் நமது முயற்சியில் இந்தியா அளித்துள்ள உதவி குறித்து தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு, நமக்கு உயிர்மூச்சு அளித்துள்ளது. எனது சார்பிலும் நமது மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

இலங்கைக்கு ஒரு வலுவான மற்றும் பரஸ்பரம் அதிக பயனுள்ள நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள மலையக மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அரசாங்க வீடுகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும். கொரோனா பெருந்தொற்று மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காலத்தில் உதவி செய்து வருவதுடன், இலங்கைக்கு தேவையான அடிப்படை பொருட்களையும் இந்தியா நன்கொடையாக வழங்கி வருகிறது’ என்றார்.

வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இலங்கை பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக ரணில் கூறினார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘திரிகோண மலையில் உள்ள எண்ணெய் கிடங்கு வளாகத்தை இந்தியாவுடன் சேர்ந்து நாம் மேம்படுத்த முயன்றபோது, அந்த வளாகம் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அத்திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் மக்கள் தற்போது எரிபொருளுக்கு வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்றார்.

Tags : India ,President ,Ranil Wickremesinghe , Thanks to India for extending a helping hand in this difficult situation: Sri Lankan President Ranil Wickremesinghe's speech
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...