மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் சாரல் மழை; சேர்வலாறு சதம், ராமநதி அணை நிரம்பியது: நகர்ப்புறங்களில் குளிர்காற்று வீசுகிறது

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டும் போதிய மழை இல்லாத நிலையில், மேற்கு தொடர்ச்சி மழையில் வழக்கமான சாரல் மழை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேர்வலாறு அணை நீர்மட்டம் சதம் அடித்தது. ராமநதி அணை நிரம்பிய நிலையில் உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி பெய்து வருகிறது. பருவமழைக்கே உரித்தான சாரல் காற்றும், இதமான குளிரும் இம்மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக தென்படுகிறது. காலையில் வெயிலும், மாலை நேரங்களில் இடி, மின்னலுடன் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கடந்த 1ம் தொடங்கி 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி சென்னை வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்தது.

இருப்பினும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை இதுவரை பெய்யவில்லை. கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல சாரல் காணப்படுகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர் வரத்து சீராக உள்ளது. நேற்று காலை சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து சதம் அடித்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 71 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 75.30 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.05 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 70 மிமீ மழையும், அடவிநயினார் பகுதியில் 23 மிமீ மழையும், சிவகிரி, செங்கோட்டை, ஆய்குடி பகுதிகளில் தலா 1 மி.மீட்டரும், கடனா அணையில் 12 மிமீட்டரும் மழை பெய்திருந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட கடையம் ராமநதி நீர்மட்டம் நேற்று 82 அடியானது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 110 கன அடி உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆற்று மதகுகள் மூலமாக 60 கன அடி நீரும், முக்கிய மதகுகள் வழியாக 50 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று பிற்பகல் வரை சொல்லி கொள்ளும்படியான மழை அளவு இல்லை. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரெட் அலர்ட் காரணமாக மழை கூடுதலாக பெய்யாவிட்டாலும், அடிக்கடி குளிர் காற்று வீசி வருகிறது. ஒரு சில இடங்களில் இதமான சாரலும் காணப்படுகிறது. வானம் மேகமூட்டமாகவும், அவ்வப்போது லேசான வெயிலும் தலைக்காட்டி வருகிறது.

Related Stories: