×

பரமக்குடியில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே பாண்டியர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே குண்டாறு கரையில் வழிமறிச்சான் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் காட்டுப்பகுதிக்கு சென்றபோது மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று இருப்பதை பார்த்தனர். அதனை சுத்தம் செய்து பார்த்தபோது பண்டைகால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. கல்வெட்டில் மீன் போன்ற உருவம் பொறிக்கப்பட்டு, கருவறையில் கை, கால்களை மடக்கிக்கொண்டு குழந்தை அமர்ந்திருப்பது போன்ற உருவங்கள் இருந்தது. நான்கு திசையை குறிக்கும் வகையில் வட்டமிட்டு அதனுள் அம்புக்குறிகள் போடப்பட்டுள்ளது. சுமார் 4 அடி உயரம் உள்ள கல்வெட்டை கிராம இளைஞர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

வழிமறிச்சான் கிராமம் வழியாக செல்லும் குண்டாறு கரையோரத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு என கூறப்படுகிறது. இக்கிராமம் முழுவதும் ஆங்காங்கே பழங்கால மண்பாண்ட ஓடுகள், கலைநயமிக்க பொருட்கள் சிதறி கிடப்பதாக கூறப்படுகிறது. கீழடியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Discovery of Pandyan Inscriptions at Paramakudi
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...