ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் 2023ம் ஆண்டு காலண்டர் ஆல்பம் வெளியீடு

சிவகாசி: ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இங்கு காலண்டர் தயாரிப்பு பணியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். காலண்டர் தயாரிப்பு மூலம் சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று ஆடிப்பெருக்கையொட்டி 2023ம் ஆண்டிற்கான காலண்டர்கள் ஆல்பம் நேற்று வெளியிடப்பட்டது.மேலும், 2023 ஆண்டிற்கான காலண்டர் வடிவங்கள், அளவுகள், தயாரிக்கப்பட்டுள்ள மெட்டீரியல், விலை விவரங்களை ஆல்பத்துடன், முகவர்களுக்கு காலண்டர் நிறுவனங்கள் வழங்கின. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து காலண்டர் ஆர்டர்கள் எடுக்கும் பணிகளை முகவர்கள் துவங்குவார்கள். செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களும் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கான காலண்டர்கள் அனுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

காலண்டர் தயாரிப்பாளர் ரிஷி சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சிவகாசியில் தினசரி, மாதக்காலண்டர்கள், ஒவ்வொரு ஆண்டும் புதுமையான வடிவமைப்புகளில் தயாரிக்கப்படுவதால் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. காலண்டர் தயாரிப்புக்கு அட்டை, ஆர்ட் பேப்பர் உள்ளிட்டவை முக்கிய மூலப்பொருளாக உள்ளன. இந்த மூலப்பொருட்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு சோதனையாக காலண்டர் தயாரிப்புக்கான ஜிஎஸ்டியை கடந்தாண்டு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக ஒன்றிய அரசு உயர்த்தி விட்டது. இதனால் 2023ம் ஆண்டுக்கான காலண்டர் விலையை, கடந்தாண்டை விட 30 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’என்றார்.

புதிய வடிவில் உருவாக்கம்

காலண்டர் முகவர் பிரபு கூறுகையில், ‘‘ஆல்பங்களை வைத்துதான் ஆர்டர் எடுத்து கொடுப்போம். வியாபார நிறுவனங்கள் பெரும்பாலும் சாமி படங்களை அதிகமாக ஆர்டர் கொடுக்கின்றன. வியாபார நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் புதுப்புது வடிவில் காலண்டர்கள் தாயாரிக்க காலண்டர் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். இதில் டை கட்டிங் காலண்டர்கள் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன’’என்றார்.

Related Stories: