×

பிரிந்து சென்றார் மனைவி...பிறந்தது மெகா அணை...!

தென் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் செறுதோணியில், 839 மீட்டர் உயரமுள்ள குறவன் மலையையும், 925 மீட்டர் உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து 555 அடி உயரத்தில் பெரியாறு நதியின் குறுக்கே கட்டப்பட்ட ஆர்ச் டேம் (வளைவு அணை) தான் இடுக்கி அணை. 60 சதுர கிமீ நீர்தேக்கப்பரப்பும், 72 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவும் கொண்ட இடுக்கி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் மூலமட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் 6 ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய ஆர்ச் டேமான இடுக்கி அணை உருவான வரலாறு சுவாரசியமானது.20 நூற்றாண்டின் தொடக்கத்தில், செறுதோணி பகுதியில் உள்ள குறவன் மலையில், குலும்பன் என்ற ஆதிவாசி குறவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

தினமும் தான் வசிக்கும் மலையின் எதிர்புறமுள்ள குறத்தி மலைக்கு பெரியாறு நதிநீரை கடந்து சென்று, தங்கள் அன்றாட குடும்ப வாழ்க்கைக்கு தேவையான தேன் உட்பட பொருட்களை சேகரித்து வருவது வழக்கம். ஒருநாள் குலும்பன் குறத்தி மலையின் உச்சிப்பகுதிக்கு பொருட்கள் சேகரிக்க சென்றபோது, பெய்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் மலையை விட்டு கீழே இறங்கி வர முடியாத நிலை. 3 நாட்கள் இரவும் பகலும் பெய்த மழையில், தேனெடுக்க சென்ற தனது கணவனை நினைத்து குறத்தியும், தனியாக விடப்பட்ட மனைவியை நினைத்து குறவரும் ஆளுக்கொரு பக்கம் மலை உச்சியில் தவித்தனர். இருமலைகளுக்கிடையே ஒரு பாலத்தை கட்டினால் வெள்ளப்பெருக்கை பற்றிய கவலை வேண்டியதில்லை என அத்தருணத்தில் குறவரின் மனதில் தோன்றிய யோசனையே பின்னாளில் இடுக்கி அணை உருவாக காரணம் ஆனதாக கூறப்படுகிறது.

1932ல் மலங்கரை எஸ்டேட்டில் சூப்பிரண்டாயிருந்த ஆங்கிலேயர் ஜான் என்பவர், இடுக்கி பகுதியில் வேட்டையாட சென்றபோது குலும்பனை கண்டார். காட்டிற்குள் தனக்கு வழிகாட்டியாக குலும்பனை துணைக்கு வைத்து கொண்டார். அப்போது குலும்பன், குறவர், குறத்தி மலையையும், இருமலைகளுக்கிடையே ஓடும் பெரியாறு நதிநீரையும் அவரிடம் காண்பித்து, மழைக்காலத்தில் தனக்கு ஏற்பட்ட இன்னலையும் கூறி, இவ்விரு மலைக்கிடையே பாலம் கட்ட முடியுமா என கேட்டுள்ளார். குலும்பனின் எதார்த்தமான கேள்வியால், சிந்திக்க தொடங்கிய ஜான், பொறியாளரான தனது சகோதரனிடம் இதுகுறித்து ஆலோசனை செய்தார். பின் இப்பகுதியில் அணை கட்டுவது குறித்து திருவிதாங்கூர் அரசுக்கு தெரிவித்தார்.இதுகுறித்து 1937ல் இத்தாலியை சேர்ந்த பொறியாளர்கள் அஞ்சமோ ஒமேதயா, க்ளாந்தயா மாசலே அணை கட்டுவது குறித்த விவரமான திட்ட அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைத்தனர். எனினும் அணை கட்ட அரசு முன்வரவில்லை. இந்திய சுதந்திரத்திற்கு பின் 1963ல் அணை கட்ட அங்கீகாரம் கிடைத்தது. எனினும் 1969 ஏப்ரலில் அணைக்கான பணிகள் தொடங்கி, பிப்ரவரி 1973ல் பணிகள் நிறைவு பெற்றன. இந்த அணை கட்டுவதற்கான பொறுப்பையும், 107.5 கோடி செலவையும் கேரள மாநில மின்சார வாரியம் ஏற்று கொண்டது.

இவ்வளவு சிறப்புமிக்க இடுக்கி அணை கட்ட காரணமாயிருந்த ஆதிவாசி குலும்பனின் சிலையை அவரது மனைவியுடன் சேர்த்து இடுக்கி அணையில் சுற்றுலா பயணிகளின் பார்வையில் படும்படி வைத்து பெருமைப்படுத்தியுள்ளது கேரள அரசு.இதற்கிடையே ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆக.1 முதல் அக்.31 வரை இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை பயன்படுத்தி இடுக்கி அணை பிரமாண்டத்தையும், குலும்பன், அவரது மனைவி சிலையையும் பார்க்க செல்வோமா...!

Tags : Mega Dam , Wife separated...Mega Dam was born...!
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...