×

ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சை பேச்சு: தலைமறைவான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை கைது செய்ய போலீஸ் தீவிரம்

சென்னை: ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் தலைமறைவான இவரை போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரசார பயண நிறைவு விழா பொது கூட்டம் கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரான சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது,‘ ஸ்ரீரங்கம் கோயில் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தைபெரியார் திராவிடர் கழகம் சார்பில் வீடியோ ஆதாரத்துடன், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் தமிழகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கலவரத்தை தூண்டுகிறார். அவரது பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

எனவே, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தானர்.அந்த புகாரின் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கனல் கண்ணன் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர், சர்ச்சைக்குரிய வகையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது தெரியவந்தது. அதைதொடர்ந்து கனல் கண்ணன் மீது கலவரத்தை தூண்டுதல் உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த கனல் கண்ணன், தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்று அச்சத்தில் தலைமறைவாகிவிட்டார். இருந்தாலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமறைவாக உள்ள கனல் கண்ணனை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



Tags : Periyar ,Srirangam ,Kanal Kannan , Controversy to break Periyar statue in Srirangam: Police keen to arrest mastermind Kanal Kannan
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...