×

இரவு தாமதமாக விடுதிக்கு வந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் அளித்ததால் விபரீதம்; கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் 2 பேர் ‘மெர்குரி சல்பைட்’ அமிலம் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை: கல்லூரி விடுதிக்கு இரவு கால தாமதமாக வந்தது குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் அளித்ததால் 2 கால்நடை மருத்துவ கல்லூரி மாணவிகள் மெர்குரி சல்பைட் அமிலத்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆபத்தான நிலையில் 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் மதுரை கருப்பாயூரணி அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்த 19 வயது மாணவி மற்றும் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஆகியோர் 2ம் ஆண்டு கால் நடை மருத்துவம் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும், கடந்த வாரம் விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த விடுதி வார்டன் இரவு நேரம் தாமதமாக வந்த 2 மாணவிகளை நேரில் அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு இல்லாமல் மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து 2 மாணவிகளும் அடிக்கடி இரவு நேரம் வெளியே சென்று வருவதாக கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மாணவியின் பெற்றோர் தங்களது மகள்களை கடுமையாக கண்டித்துள்ளனர். அதோடு இல்லாமல், விடுதி அறையில் தங்கியுள்ள சக மாணவிகள் மற்றும் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்களும் 2 மாணவிகளிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த 2 மாணவிகளும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்த மெர்குரி சல்பைடு அமிலத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துள்ளனர். பிறகு இரண்டு மாணவிகளும் மெர்குரி சல்பைடு அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வெகு நேரம் விடுதி அறையில் இருந்து வெளியே வராத 2 மாணவிகளின் தோழிகள் சந்தேகத்துடன் விடுதி அறையில் வந்து பார்த்த போது, 2 மாணவிகளும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 மாணவிகளையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு 2 மாணவிகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் 2 கால் நடை மருத்துவ மாணவிகள் தற்கொலை முயற்சி குறித்து கல்லூரியின் விடுதி வார்டன் மற்றும் விடுதி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மருத்துவ கல்லூரி மாணவிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Misfortune because parents were informed about coming to the hostel late at night; 2 veterinary college students attempted suicide by drinking mercury sulphide acid: intensive care at government hospital in critical condition
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...