×

சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்

புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதியதலைமை  நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட உள்ளார். நாட்டின் அடுத்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தேர்வு செய்வதற்கான அதிகாரபூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. பொதுவாக, தலைமை நீதிபதியின் பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றிய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதன்படி, அடுத்த தலைமை நீதிபதியாக யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்யுமாறு அவருக்கு ஒன்றிய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தை நியமிக்க அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரை செய்துள்ளார். அதன்படி உதய் உமேஷ் லலித், 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தெரிகிறது. புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் உதய் உமேஷ் லலித் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக உதய் உமேஷ் லலித் செயல்பட்டுள்ளார்.

புதிதாக பதவியேற்க உள்ள உதய் உமேஷ் லலித், 1957ம் ஆண்டும் நவம்பர் 9ம் தேதி பிறந்தார். மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Chief Justice of the Supreme Court ,Uday Umesh Lalit , The new Chief Justice of the Supreme Court is Uday Umesh Lalit
× RELATED உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை...