×

உயர்நீதிமன்றம் அருகே வாடகை செலுத்தாத 256 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே இன்று அதிகாலை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்த 256 கடைகளுக்கு மண்டல அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை உயர்நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் 256 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டன.

தற்போது அக்கடைகளில் செல்போன், பொம்மை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை நடக்கின்றன. இக்கடைகளுக்கான வாடகையை மாதந்தோறும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். எனினும், இங்குள்ள 256 கடைக்காரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதன்படி, இக்கடைகளின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.60 லட்சம் வாடகை பாக்கி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியும் வாடகை நிலுவை தொகையை செலுத்த முன்வரவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் 5வது மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் நிதிபதி, ரங்கநாதன் தலைமையில் வரி மதிப்பீட்டாளர்கள் ரஹமதுல்லா, விஜயகிருஷ்ணன், உரிமம் ஆய்வாளர்கள் மணிகண்டன், பத்மநாபன் ஆகியோர் எஸ்பிளனேடு போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், அங்கு மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்திருந்த 256 கடைகளை பூட்டி மண்டல அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் தலைமையில் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : High Court , Sealing of 256 non-paying shops near High Court: Corporation action
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...