திருவொற்றியூரில் இன்று டவரில் ஏறி கூலித்தொழிலாளி தற்கொலை மிரட்டல்: மனைவியுடன் சேர்க்க வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் இன்று காலை தனது மனைவியை சேர்த்து வைக்க வலியுறுத்தி, ஒரு கூலித்தொழிலாளி டவரில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் போராடி போலீசாரும் தீயணைப்பு படையினரும் கீழே இறக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சென்னை திருவொற்றியூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வடிவுக்கரசி. செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்திருக்கிறது. இதற்கிடையே குடும்பத் தகராறு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி வடிவுக்கரசி தனியே பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி செந்தில்குமார் பலமுறை அழைத்தும் வரவில்லை.

இதுகுறித்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் செந்தில்குமார் புகார் அளித்தார். எனினும், மனைவி வடிவுக்கரசி மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் செந்தில்குமார் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை திருவொற்றியூர் அருகே பிஎஸ்என்எல் டெலிபோன் டவர்மீது செந்தில்குமார் குடிபோதையில் ஏறியுள்ளார். பின்னர் அங்கிருந்து, தன்னுடன் மனைவியை சேர்த்து வைக்க வேண்டும். இல்லையேல் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திருவொற்றியூர் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். டவரில் ஏறிய தீயணைப்பு படையினர் செந்தில்குமாரை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சித்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு செந்தில்குமாரிடம் செல்போனில் மனைவியை சமாதானமாக பேசவைத்து, தீயணைப்பு படையினர் கீழே பத்திரமாக இறக்கி வந்தனர்.பின்னர் செந்தில்குமாரை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு செந்தில்குமாரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: