×

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் தாங்கல் ஏரி சீரமைப்பு பணிகள் தீவிரம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள மிகப் பழமையான தாங்கல் ஏரியில் தற்போது தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் துவங்கி, நந்திவரம் காலனி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் 50 ஆண்டு பழமையான நந்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அதன் எதிரே நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி கழிவுநீர் கலந்து வருவதால், அந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திமுக ஆட்சியில் தாங்கல் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, தற்போது ரூ.1.92 கோடி மதிப்பில் தாங்கல் ஏரியை தூர்வாரி சீரமைத்து, அதன் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தாங்கல் ஏரியில் எடுக்கப்படும் மண் விற்பனை செய்வதை தடுத்து, அந்த மண்ணை கரைகளைப் பலப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
 
மேலும், தாங்கல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், அங்குள்ள குழாய்களை அகற்றி, நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என நகர அதிமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவருமான டி.சீனிவாசன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, தாங்கல் ஏரியில் சேகரிப்படும் மண்ணை கரைகளை பலப்படுத்த, அங்குள்ள விவசாய நிலங்களில கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், தாங்கல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் எம்கேடி.கார்த்திக் உறுதியளித்தார். எனவே, தாங்கல் ஏரி சீரமைப்பு பணிகளை தரமான முறையில் முடித்து, விரைவில் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Nandivaram ,Goduwancheri , Tankal lake rehabilitation work in Nandivaram-Kudovanchery is in full swing
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...