×

கத்தியால் குத்தி ரூ.1 லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டி பறித்த விவகாரம்; சக ‘குருவிகளுக்கு’ தெரிந்ததால் நாடகமாடிய நபர் தற்கொலை: 5 பேர் அப்ரூவரானதால் விபரீத முடிவு

சென்னை: திருவல்லிக்கேணியில் கத்தியால் குத்தி 1 லட்சம் பணம், 69 கிராம் தங்கக் கட்டி பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த நபரே நண்பர்களை வைத்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனால் சக குருவிகளுக்கு விபரம் தெரிந்ததால் உயிருக்கு பயந்து நாடகமாடிய நபர் தூக்கிட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது(41). இவர் கடந்த மாதம் 24ம் தேதி காலை திருவல்லிக்கேணி ஓவிஎம் தெருவில் உள்ள தனது நண்பர் தங்கியுள்ள ஏஎம்எஸ் விடுதிக்கு பைக்கில் சென்றார். சிறிது தொலைவு சென்றதும் முகத்தில் முகக்கவசம் அணிந்து வந்த நபர்கள் பைக்கில் சென்ற சாகுல் அமீதை வழிமறித்து கத்தியால் குத்தி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 69 கிராம் தங்க கட்டி மற்றும் அவர் ஓட்டி வந்த பைக், செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இந்த சம்பவத்தில் சாகுல் அமீதுக்கு மூன்று இடத்தில் வெட்டு காயங்கள் மற்றும் இடது கால் முட்டியிலும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து சாகுல் அமீது, தன்னை சிலர் வழிமறித்து 1 லட்சம் பணம் மற்றும் 69 கிராம் தங்க கட்டி, செல்போன், பைக்கை பறித்து சென்றதாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். வழிப்பறி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மற்றும் 69 கிராம் தங்க கட்டிக்கான எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதற்கிடையே சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, கடத்தல் குருவிகளாக பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த விஜய்(21), சவுகார்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ்(24), போஸ், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சாமியா ஹூமாயூன்(32), ஏழு கிணறு பகுதியை சேர்ந்த ராம்குமார்(25) என்று தெரியவந்தது. உடனடியாக போலீசார் 5 நபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், புகார் அளித்த சாகுல் அமீது கடத்தல் குருவியாக பணியாற்றி வந்ததும் தன்னிடம் பணம் மற்றும் தங்க கட்டி கொடுத்த நபரை ஏமாற்றும் வகையில் சக குருவிகளாக பணியாற்றி வந்த 5 பேரை வைத்து பணம், தங்க கட்டியை பறித்து விட்டு யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. சாகுல் அமீது நாடகமாடிய விபரம் பணம் மற்றும் தங்க கட்டி கொடுத்து அனுப்பிய நபருக்கு தெரியவந்தது. இதனால் தன்னை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்திலும் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்த அச்சத்திலும் சாகுல் அமீது நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவல்லிக்கேணி போலீசார் சென்று சாகுல் அமீது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாகுல் அமீது தற்கொலைக்கு காரணமான நபர்கள் யார்? பணம் மற்றும் தங்க கட்டி கொடுத்த நபர்கள் யார்? இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : 1 lakh cash and 69 gram gold bars were snatched at knifepoint; A person who became a drama because he knew his fellow 'sparrows' committed suicide: 5 people were accused, a tragic end
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...