×

மலைகளின் இளவரசி மக்களின் தாகத்தை முற்றிலும் தீர்க்க பிரிட்டிஷ் கால குடிநீர் தேக்கத்தில் ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணி: மழை பெய்யாமலே 3 ஆண்டுக்கு சமாளிக்கலாம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மக்களின் தாகத்தை முற்றிலும் தீர்க்க ரூ.10 கோடியில் ஆங்கிலேயர் காலத்து குடிநீர் தேக்கத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 24 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொடைக்கானல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 2 அணைகள் உள்ளன. இந்த 2 அணைகளும் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. மனோரத்தினம் சோலை அணை கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட அணையாகும். 24 அடி உயரம் கொண்ட இந்த அணை 312 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மண் அணை 20 அடி உயரம், 200 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

கீழ்குண்டாறுக்கு மீண்டும் உயிர்
இந்த 2 அணைகளை கொண்டுதான் கொடைக்கானல் மக்களின் குடிநீர் தேவையை நகராட்சி நிர்வாகம் பூர்த்தி செய்து வந்தது. அதன்பின் நகராட்சி பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு ஒருமுறை கூட குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை கூட ஏற்பட்டது. இவற்றை கருத்தில் கொண்டு கொடைக்கானல் ஏரிக்கு அருகில் ஜிம்கானா பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த திமுக ஆட்சியில் கீழ் குண்டாறு குடிநீர் திட்ட பணிகள் பல கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் தற்போது மீண்டும் உயிர்பெற்று நடந்து வருகிறது.

90 சதவீத பணி முடிந்்தது
இந்நிலையில் கொடைக்கானல் மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வண்ணம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தில் மேம்பாட்டு பணிகள் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழைய குடிநீர் திட்டத்தில் உள்ள மண் கரை கான்கிரீட் அமைப்புகளால் நவீன முறையில் சுமார் 7 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல இந்த அணை பகுதியில் ஆழப்படுத்தும் பணியும், அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று உள்ளது. கொடைக்கானல் நகராட்சி பகுதியில் சுமார் 6,179 குடிநீர் இணைப்புகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு குடிநீர் விநியோகம் 40 லட்சம் லிட்டர் நடந்து வருகிறது. இந்த குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் நிறைவடைந்ததும் கொடைக்கானல் மக்களின் குடிநீர் தாகம் முற்றிலுமாக போக்கப்படும். குடிநீர் பஞ்சம் என்பது இனி 20 ஆண்டுகளுக்கு இருக்காது. மழை பொழிவே இல்லாமல் இருப்பினும் இந்த அணையில் இருந்து கொடைக்கானல் பொதுமக்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகிக்க முடியும் என்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.

பணி முடிந்ததும் பற்றாக்குறை இருக்காது
இதுகுறித்து கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கேட்ட போது கூறியதாவது: கொடைக்கானல் பழைய நீர்த்தேக்கத்தில் 200 லட்சம் லிட்டராக இருந்த கொள்ளளவு, இந்த கரை பகுதியை 7 மீட்டர் உயர்த்துவதால் சுமார் 800 லட்சம் லிட்டர் கொள்ளளவு கிடைக்கும். இதன்மூலம் கொடைக்கானல் மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 100 லிட்டர் வீதம் விநியோகிக்க முடியும். தினந்தோறும் 40 லட்சம் லிட்டர் சப்ளை வழங்க முடியும். கடந்த காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் சப்ளை நடந்த நிலையில் தற்போது தினந்தோறும் 24 வார்டு பொதுமக்களுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு இடங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை நடந்து வருகிறது. இந்த அணை மேம்படுத்தப்பட்டவுடன் அனைத்து பகுதிக்கும் தினந்தோறும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல செயல்படாமல் இருந்த சுத்திகரிப்பு நிலையம் 50 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டு 50 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகள் முடிவடைந்த உடன் கொடைக்கானல் மக்களின் தாகம் முற்றிலுமாக தீர்ந்து விடும். இவ்வாறு கூறினார்.


Tags : Princess , 10 Crore British Era Water Reservoir to Completely Quell Thirst of Princess of Hills: 3 Year Survivable Without Rain
× RELATED ரம்ஜான் விடுமுறை, கொளுத்தும் வெயில்...