×

கண்ணமங்கலம் அருகே நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது வரலாற்றை நினைவு கூறும் கண்ணாடி மாளிகை ₹11.30 கோடியில் புனரமைக்க நடவடிக்கை

* சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
* சுற்றுலாத்தலமாக மாற்ற கோரிக்கை

கண்ணமங்கலம்:  திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு, இன்றளவும் வரலாற்றை நினைவு கூறும் விதமாக உள்ள கண்ணாடி மாளிகையினை ₹11.30 கோடியில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு சுற்றுலாத்தலமாகவும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் பூசிமலைக்குப்பம் அருகே வனப்பகுதியில் பிரமிக்க வைக்கும் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டு இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் அடர்ந்த வனப்பகுதியில் 1806ம் ஆண்டு, அப்போதைய சிற்றரசரான திருமலை ராவ் சாஹிப் என்பவர் தன்னுடைய காதலிக்காக பிரெஞ்சு கட்டிட கலைநயத்துடன் கண்ணாடி மாளிகை கட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்தவர்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி மாளிகை 215 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உள்ளது. கடந்த 70ஆண்டுக்கு மேலாக வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதன் அருகில் மாளிகை நகர் என்ற இலங்கை தமிழர்கள் வசிக்கும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு இப்பெயர் வரக்காரணம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கண்ணாடி மாளிகை தான் என்று கூறுகின்றனர். இதனை சுற்றிலும், 5 கிலோமீட்டர் தூரத்திற்கு எஸ்.யூ.வனம், பூசிமலை குப்பம், அத்தியூர், மூலதத்தாங்கல், முள்ளண்டிரம், பட்டாங்குளம், புதுப்பாளையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சி அடைந்த இந்நாளில் கூட, வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த மாளிகையில் வசிக்க மனிதர்கள் ஒரு கணம் யோசிப்பார்கள். ஆனால் மின்சார வசதியோ தொலைத்தொடர்பு வசதியோ, அதிக போக்குவரத்து வசதியோ இல்லாத அந்த காலத்திலேயே அடர்ந்த காட்டின் நடுவில் இவ்வளவு பிரமாண்டமான கண்ணாடி மாளிகை கட்டி ஆங்கிலேயர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. 215 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாளிகையின் முழுமையான வரலாறு தெரிந்தவர்கள் என்று யாரும் இப்போது இல்லை.

ஆங்கிலேயர்களுக்கே உரிய கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி மாளிகை அந்த காலத்திலேயே கலர் கண்ணாடிகள், அழகிய வண்ண சுவர் காகிதங்களாலும் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டுள்ளது. இதனைக்கொண்டே, மாளிகையின் பழமையை அறியலாம். இந்த மாளிகை அருகிலேயே அழகிய நீச்சல் குளம் கட்டப்பட்டிருக்கிறது. அதோடு குதிரை லாயம், சமையல் கூடம் என்று தனித்தனியாக அமைந்துள்ளது. 3 மாடிகளில் சுழல் படிக்கட்டுகள் ஒருபுறமும் சாதாரண படிக்கட்டுகள் மறுபுறமும் என்று இருவகையான படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் வனப்பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த மாளிகை, அதன்பின்னர், பராமரிப்பின்றி நாளடைவில் கண்ணாடி மாளிகையின் கதவு ஜன்னல் போன்ற பொருட்கள் சமூக விரோதிகளால் திருடப்பட்டது. இதன் உச்சகட்டமாக இந்த மாளிகையில் ஆங்கிலேயர்கள் புதைத்து வைத்த புதையல் இருப்பதாக கிளப்பப்பட்ட புரளியால், இந்த மாளிகையையே சின்னாபின்னமாகிப் போனது. ஆங்காங்கே அவரவர் விருப்பம் போல தோண்டி பார்க்கத்தொடங்கினர். சுவர்கள் இடிக்கப்பட்டும், பள்ளங்கள் தோண்டப்பட்டும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. 1977 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் அகதிகள் இந்த மாளிகையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களுக்கு இந்த மாளிகை அருகிலேயே மாளிகை நகர் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடம் இந்த மாளிகையிலேயே இயங்கி வந்தது. மேலும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் கண்ணாடி மாளிகைக்கு சுற்றுலாவாக வந்து பார்த்து மகிழ்ந்து சென்றனர். இந்த மாளிகையை அமிர்தி வனப்பூங்கா போல சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை கனவாகிப்போனது. யாரும் பயன்படுத்தாமல் இந்த மாளிகை பாழடைந்து கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. மது குடிப்பதற்கும், சூதாடுவதற்கும் புகலிடமாக மாறியுள்ளது. வரலாற்று நினைவுச்சின்னமாக, உள்ள இந்த கண்ணாடி மாளிகையினை, பராமரித்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளை வைத்தனர். இதற்கிடையே தான், கடந்த ஆண்டு மாவட்ட வனத்துறை அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில் ஆரணி வனச்சரக அலுவலர் மோகன்குமார் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பூசிமலைக்குப்பம் காப்பு காட்டில் ஆய்வு செய்தனர்.

அப்போது, கண்ணாடி மாளிகை காப்பு காட்டிற்கு அருகே இருப்பதால், பழைய ஆவணங்களை சரி பார்த்தனர். இதில், கண்ணாடி மாளிகை உள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. எனவே, வனத்துறையினர்  இதுகுறித்து அப்போதைய கலெக்டரிடம் தெரிவித்து, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சர்வே செய்தனர்.  கண்ணாடி மாளிகை அமைந்துள்ள 2.50 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பது உறுதியானது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகையை மீட்டு, அதனை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தனர். இது வனத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கண்ணாடி மாளிகையில் சமூக விரோத கும்பல் யாரையும் அனுமதிக்காமல் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், மாளிகையில் மது குடிப்பது, சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, பொதுமக்களின் பல ஆண்டுகால எதிர்பார்ப்பான கண்ணாடி மாளிகையினை, ₹11.30 கோடி மதிப்பீட்டில்   புனரமைத்து பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சருக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் நன்றி  தெரிவித்த பொதுமக்கள்,  படவேடு உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்படும்  நினைவு சின்னங்களை இந்த  கண்ணாடி மாளிகையில் வைத்து பாதுகாத்து வரலாற்று  சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணாடி கோட்டை என்றும் அழைத்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்திலிருந்து 14 கிலோ மீட்டர், ஆரணி நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் பூசிமலைக்குப்பத்தில் உள்ள சிறிய மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. எஸ்.வி.வனம் காப்புக்காடுகளுக்குள் அமைந்துள்ளதால், தமிழ்நாடு வனத்துறையின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. கண்ணாடி மாளிகையின் கட்டிடக்கலை அழகு மற்றும் வடிவமைப்பால் தனித்துவமானது. பரந்த சமையலறைகள் தவிர, சுழல் வகை படிக்கட்டு பார்வையாளர்களை ஈர்க்கிறது. பிரதான கட்டிடத்திற்கு வெளியே ஒரு கிணறு உள்ளது. அதில் குளிக்க கீழே இறங்க படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன,கட்டிடத்தின் சுவர்கள் கண்ணாடி போல் பளபளக்கும் வகையில் கட்டப்பட்டிருப்பதாகவும், உள்ளூர் மக்கள் அதை ‘கண்ணாடி கோட்டை’ என்றும் அழைத்தனர்.

பங்களாவின் வளாகம் சுமார் 2.50 ஏக்கர் பரப்பளவில் இருக்கும். இந்த அரண்மனை 1850 க்குப் பிறகு 10 வது அர்னி ஜாகிர், ஸ்ரீனிவாச ராவ் சாஹிப் என்பவரால் கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் வில்லியம் போக்சன், ஒரு பிரிட்டிஷ்காரர். அவர் சென்னை மாகாணத்தில் ஸ்பென்சர் ஷோரூம் உட்பட பல பிரபலமான கட்டிடங்களைக் கட்டியுள்ளார். பிரிட்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கட்டமைப்பு எக்கு தூண் உள்ளது. இது மழை நீரை அகற்றவும் பயன்படுகிறது.

தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகலிடமாக மறிவருகிறது. எனவே, இதனை சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தினகரன் செய்திகள் எதிரொலியாக சட்டசபையில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மானியக்கோரிக்கையில் அமைச்சர். எ.வ.வேலு அறிவித்தார். வரலாற்று நினைவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு, செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ெதரிவித்து வருகின்றனர்.


Tags : Kannamangalam , Near Kannamangalam surrounded by mountains on all four sides, the glass house which commemorates the history is being reconstructed at ₹11.30 acre.
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே