சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு..!!

சென்னை: காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இன்று தலைமைச் செயலகத்தில், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற  காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேச தடகளப் போட்டி நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டேம் நகரில் ஜூலை 22 முதல் 31 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் திரு. எ. மயில்வாகனன் அவர்கள் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர், 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 3 தலைமைக் காவலர்கள் மற்றும் 3 பெண் தலைமைக் காவலர்கள், என மொத்தம் 13 பேர்  பல்வேறு போட்டிப் பிரிவுகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறையினர் 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 3 வெண்கலம், என மொத்தம் 33 பதக்கங்களை வென்றனர்.  

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநர் திரு. ப. கந்தசுவாமி, இ.கா.ப., ஆயுதப்படை காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. அபய்குமார் சிங், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: