கோவை ஜோதிடர் மீது மோசடி வழக்கு: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை: சொத்து மீதான வில்லங்கத்தை பரிகார பூஜை செய்து நீக்குவதாக கூறி 15 சவரன் நகை மற்றும் பணம் மோசடி செய்த புகாரில் இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத் தலைவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து ஜோதிடர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை வீட்டு வசதி வாரிய பகுதியில் வசிக்கும் பிரசன்னா (41), என்பவரே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர். அவர் இந்து மக்கள் கட்சியில் ஜோதிடர் பிரிவு துணைத்தலைவராக உள்ளார். அவரை சொத்து பிரச்சனைக்கு தீர்வு காண சென்னையை சேர்ந்த கருப்பையா என்பவர் அனுகியுள்ளார்.

அவர்களிடையே பணம், நகை கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பிரசன்னா அவரது மனைவி உள்ளிட்டோர் மீது கருப்பையா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றி அறிந்த பிரசன்னா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அது தொடர்பாக வீடியோவும் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரசன்னா வீடியோ வெளியிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் பிரசன்னா வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு மயங்கிய நிலையில் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிரசன்னாவின் மனைவியின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதிடர் பிரசன்னா தனது குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையை சேர்ந்த கருப்பையாவுக்கு சொத்து தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. சொத்து மீதான வில்லங்கத்தை பரிகார பூஜை செய்து நீக்கி விடலாம் என பிரசன்னா கூறியுள்ளார். அதன் பேரில் கருப்பையாவிடம் இருந்து அதிக அளவில் பணம் பெற்ற போதிலும்  உரிய பலன் கிடைக்கவில்லை.

கடைசியாக கருப்பையாவின் மனைவியும் மாங்கல்யத்தை வைத்து மாங்கல்யம் பரிகாரம் பூஜை செய்ய வேண்டும் என பிரசன்னா கூறியுள்ளார். அதன் பேரில் மனைவியின் 15 சவரன் தாலி கொடியை கொடுத்ததாக கருப்பையா போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் ஜோதிடரின் செயல்பாடுகள் பிடிக்காததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு அது தொடர்பாக செல்வபுரம் காவல்நிலையத்தில் கருப்பையா புகார் அளிக்க நேர்ந்துள்ளது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தான் பிரசன்னா குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: