அரசியல் ரீதியாக யார் தாக்கினாலும் நயத்தக்க நாகரிக மிக்கவர்களாக நடந்திடுக!: அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்..!!

சென்னை: அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகரிகம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தூய்மையாக நடந்து கொள்வது ஆகும். உயர்ந்த நிலையில் இருந்தும் உயர்ந்த குணம் இல்லாதவர் சிறியர். கீழ் நிலையில் இருந்தாலும் இழிவான குணம் இல்லாதவர் பெரியோர் என்றார் வள்ளுவ பெருந்தகை. நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள். நாம் அதை தாங்கி கொண்டு வளர்ச்சி வேகத்தை கூட்ட வேண்டும்.

பிறர் ஏசும் ஏச்சை உரமாக்கி கொண்டு வளர வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, நமக்கு மக்களிடையே உள்ள ஆதரவு நம்மை நாகரிகமற்ற முறையில் பேசுபவரை கவர்ந்திருக்க வேண்டும். அவர்கள் மக்களுடைய வெறுப்பிற்கும், தொண்டர்களுடைய கோபத்திற்கும் ஆளாகியுள்ளனர். அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த இயலாமைதான் நம் மேல் கோபமாக மாறி இருக்கிறது. இந்த கோபம்தான் நாகரீகமற்ற, பண்பாடற்ற, ஒழுங்கீனமான வார்த்தைகளை உபயோகப்படுத்த வைக்கிறது.

இதை மனதில் நிலை நிறுத்தி, அரசியல் ரீதியாக யார் தாக்கினாலும் நயத்தக்க நாகரிக மிக்கவர்களாக அதிமுக தொண்டர்கள் நடக்க வேண்டும். மாற்றார் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்காக அதிமுகவினர் அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். யார் விமர்சித்தாலும் வாதத்துக்கு வாதம், பேச்சுக்கு பேச்சு என நாகரிகம் மிக்கவர்களாக அதிமுகவினர் நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: