பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 எட்டியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி அடுத்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த ஜூலை மாதம் வரை தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள வால்பாறை, காடம்பாறை, அப்பர் ஆழியாறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பரம்பிகுளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பரம்பிகுளம் மற்றும் ஆழியாறு அணை பகுதிகளுக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழை காரணமாக அப்பர் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆழியாறு நீர்மட்டம் உயர்ந்து 118 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறின் நீர்மட்டம் 118 அடியை எட்டியதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி காலையில்   9 மதகுகள் வழியாக சுமார் வினாடிக்கு 2,500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 உபரி நீர் ஆற்றில் திறந்து விட பட்டுள்ளதால் ஆழியாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆணைமலை, அம்பராம்பளையம், ஆற்றுபொள்ளாச்சி, கோபாலபுரம் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு  நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: