×

950 பேர் சிக்குவார்களா?.. அமெரிக்காவை அதிர வைத்த குஜராத் IELTS தேர்வு மோசடி: நீதிமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் திணறல்

அகமதாபாத்: குஜராத்தில் நடைபெற்ற IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் பெரும் மோசடி நடந்திருப்பது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. ஆங்கில தகுதி தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் அமெரிக்காவில் பிடிபட்ட குஜராத் இளைஞர்கள் 6 பேர் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் பேச தெரியாமல் நீதிமன்றத்தில் திணறியதால் பல ஆண்டுகளாக தொடரும் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் IELTS என்று அழைக்கப்படும் சர்வதேச ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆனால் குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி கனடா நாட்டில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 6 இளைஞர்கள் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 6 பேரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களிடம் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பதிலளிக்க முடியவில்லை. இதனால் இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது 6 பேரும் குஜராத்தில் IELTS எனப்படும் ஆங்கில தகுதி தேர்வு எழுதி கனடா சென்றவர்கள் என்பதும் அங்கிருந்து சட்ட விரோதமாக அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. கடனாவிற்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு IELTS தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற நிபந்தனை உள்ள நிலையில் 6 பேரிடமும் IELTS தேர்வு எழுதினீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு IELTS தேர்வில் 70% க்கு மேல் மதிப்பெண் பெற்றதாக பதிலளித்தனர். அப்படி இருந்தும் அவர்களால் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச தெரியாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி, இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் 6 பேரும் முறைகேடாக ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மூலம் குஜராத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. குஜராத் போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களில் 6 பேர் நவ்சாரி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் IELTS தேர்வு எழுதி கனடா நாட்டிற்கு படிக்க சென்றதை கண்டறிந்துள்ளனர்.

அப்போது தேர்வு அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் அனைத்து வைக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. குஜராத்தில் தொடங்கிய மோசடி ராஜ்கோட், வதோதரா, அகமதாபாத், ஆனந்த் நகரங்களிலும் நடத்திருப்பதும் பெரும்பாலானோர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்கா கனடா செல்வற்தாக ஒவ்வொரு மாணவரும் தலா ரூ.14 லட்சம் கொடுத்து IELTS சான்றிதழை முறைகேடாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் குஜராத்தை சேர்ந்த 950 மாணவர்கள் ஆங்கில தகுதி தேர்வில் தேர்வானதாக மோசடியாக சான்றிதழ் பெற்றதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

முறைகேடாக ஆங்கில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 950 பேரும் அமெரிக்கா அல்லது கனடாவில் இருக்கலாம் என கருதப்படுவதால் அவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. IELTS தேர்வு முறைகேடுக்கு மெக்சானாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளதால் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 140 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட IELTS தேர்வில் குஜராத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Gujarat ,America , 950 people will be caught?..Gujarat IELTS exam scam that shook America: Unable to speak a word in court
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...